விவசாயிகள் சாலை மறியல்

நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததை கண்டித்து மணல்மேடு அருகே விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-07 18:17 GMT

மணல்மேடு:

நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததை கண்டித்து மணல்மேடு அருகே விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அறுவடை

மணல்மேடு அருகே உள்ள சேத்தூர், மேலாநல்லூர், உடையூர், பருத்திக்குடி, மன்னிப்பள்ளம், பொன்வாசநல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்துள்ளனர். அறுவடையாகும் நெல்லை அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வது வழக்கம். கடந்த 15 தினங்களாக இப்பகுதியில் அறுவடையான நெல் 2 ஆயிரம் டன்னுக்கு மேல் சேத்தூர் அய்யனார் கோவில் அருகே விவசாயிகளால் அமைக்கப்பட்டுள்ள ஷெட்டில் கொட்டி வைத்துள்ளனர். அந்த நெல் மழையால் நனைந்து விவசாயிகளால் காவல் காத்து வரப்படுகிறது.

சாலை மறியல்

இதனால் கொள்முதல் நிலையம் திறக்காததால் விரக்தியடைந்த விவசாயிகள் மற்றும் கிராமமக்கள் வைத்தீஸ்வரன்கோவில் - மணல்மேடு சாலையில் சேத்தூர் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மணல்மேடு போலீசார் மற்றும் வருவாய் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடனடியாக நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் மழையால் நெல் நனையாமல் பாதுகாக்கவேண்டும் என்றும் விவசாயிகள் கேட்டுகொண்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் வைத்தீஸ்வரன்கோவில், சீர்காழி, மணல்மேடு வழியாக கும்பகோணம் செல்லும் சாலையில் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்