நேரடி நிலையங்களில் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

வடகாட்டில் அதிகரித்து வரும் பாரம்பரிய கருங்குருவை நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. அதனை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2022-08-04 23:36 IST

வடகாடு:

கருங்குருவை நெல் சாகுபடி

வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஒரு சில விவசாயிகள் பாரம்பரிய நெல் ரகங்களான கருங்குருவை, தூயமல்லி, சீரகச்சம்பா, மாப்பிள்ளை சம்பா போன்ற நெல் ரகங்கள் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் வடகாடு தெற்குப்பட்டியில் உள்ள ஒரு விவசாயி பாரம்பரிய நெல் ரகமான கருங்குருவை நெற்பயிரை பயிரிட்டு பராமரித்து வருகிறார்.

இத்தகைய நெல் ரகங்கள் மன்னர்கள் காலத்தில் மன்னர்கள் மட்டும் சாப்பிடும் உணவாக இருந்து வந்துள்ளது. தற்போதும் இந்த நெல் ரகமானது சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளில் பயிரிட தடை செய்யப்பட்ட உணவாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த பாரம்பரிய நெல் ரகமான கருங்குருவை நெல் முற்றிலும் இயற்கை முறையில் மட்டுமே பயிரிடப்பட்டு வரப்படுவதாகவும் கூறப்படுகிறது.

விதை நெல் கிடைப்பது அரிது

இந்த அரிசியில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளதாகவும், சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த வியாதி உள்பட எண்ணற்ற நோய்களை மனிதர்களை நெருங்க விடாமல் தடுக்கும் ஆற்றல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கருங்குருவை நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூறுகையில், இயற்கை முறையில் பாரம்பரிய நெல் பயிரிட ஆர்வம் இருப்பதாகவும், ஆனால் இதன் விதை நெல் கிடைப்பது அரிதிலும் அரிதாக இருந்து வருவதாகவும் கூறுகின்றனர்.

பல்வேறு ஊர்களில் தேடிப்பிடித்து விதை நெல் வாங்கி பயிரிட்டு இருப்பதாகவும், அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் இத்தகைய நெல் ரகங்கள் வாங்கப்படுவது இல்லை.

விவசாயிகள் கோரிக்கை

இதனால் தங்களது தேவைக்காக மட்டுமே தற்போது பயிரிட்டு உள்ளதாகவும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், குண்டுரகம், சன்னரகம் என்று 2 ரகங்கள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் தமிழக அரசு பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும்.

தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இத்தகைய நெல் ரகங்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்