நிலத்தில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஆதனூர் கிராமத்தில் நிலத்தில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-20 16:49 GMT

ஆரணி

ஆரணியை அடுத்த ஆதனூர் கிராமத்தில் சேகர் என்பவர் 9 ஏக்கர் விவசாய நிலம் வைத்துள்ளார். இதில் 6 ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ளார். சேகர் கடந்த 2019-ம் ஆண்டு முதல் இலவச மின்சாரத்தை பயன்படுத்தி பயிர் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சேகர் நிலத்திற்கு அருகில் நீர்நிலை உள்ளதால் அவருக்கு கொடுக்கப்பட்ட இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தாசில்தாரிடம் புகார் மனு வழங்கி உள்ளார்.

இதனால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆரணி தாசில்தாராக இருந்த ஜெகதீசன் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து மின்சாரத்துறை அதிகாரிகள் இலவச மின்சாரத்தை துண்டித்தனர். இதனால் சேகர் நெற்பயிருக்கு நீர் பாய்ச்ச முடியாமல் நெற்பயிர்கள் காய்ந்து வருகிறது.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு தேசிய பசுமை புரட்சிப்புயல் விவசாய சங்கத் தலைவர் விஜய் கீர்த்தி தலைமையில் நிலத்தில் காய்ந்த நெற்பயிர் மீது இறங்கி 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெற்பயிர்களை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாநில பொருளாளர் ரவி, மாவட்ட நிர்வாகம் அரிகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் பெருமாள், ஒன்றிய தலைவர் கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக ஆரணி தாசில்தார் ரா.மஞ்சுளா கூறுகையில், நீர்நிலைக்கு அருகில் சுமார் 100 மீட்டர் வரை இலவச மின்சாரம் வழங்கக்கூடாது என்று சட்டம் உள்ளது.

அதனால் தான் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட இடத்திற்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து கொடுத்தால் அந்த இடத்திற்கு மின் இணைப்பு தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்