ரூ.30 விலை நிர்ணயம் செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.30 விலை நிர்ணயம் செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-07-24 13:59 GMT

கோத்தகிரி, 

பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.30 விலை நிர்ணயம் செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறைந்தபட்ச ஆதார விலை

பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.30 விலை நிர்ணயம் செய்யக்கோரி நாக்குபெட்டா விவசாயிகள் நல சங்கம் சார்பில் கோத்தகிரி அருகே ஜக்கலோடை கிராமத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க பொதுச்செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். ஊர் தலைவர் பெள்ளி, நிர்வாகி லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையாக பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.30 நிர்ணயம் செய்ய வேண்டும். படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். விவசாய நிலங்களை அழித்து சொகுசு விடுதிகள், பங்களாக்கள் கட்டுவதை தடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தினர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தேயிலை விவசாயிகள் உள்ளனர்.

தீர்வு காண வேண்டும்

கடந்த சில மாதங்களாக ஒரு கிலோ தேயிலை ரூ.7 மட்டுமே கொள்முதல் விலை கிடைக்கிறது. இந்த விலை தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்கவும், தோட்டங்களை பராமரிக்கவும் போதுமானதாக இல்லை. இதனால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் பச்சை தேயிலை விலை வீழ்ச்சியால், பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் குழந்தைகளின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

எனவே விவசாயிகளை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தீர்வு காண வேண்டும். தேயிலை விவசாயிகளுக்கு மானிய தொகை வழங்க வேண்டும். தேயிலை ஏல மையத்தில் குறைந்தபட்சம் தேயிலைத்தூள் கிலோவுக்கு ரூ.150-க்கு மேல் மேல் ஏலம் எடுக்க வேண்டும் என்று வர்த்தகர்களை வலியுறுத்த வேண்டும். விவசாய பயிர்களை அழித்து சேதப்படுத்தி வரும் காட்டு பன்றிகளை சுட்டுக்கொல்ல வனத்துறையினருக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்