உரத்தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு உரத்தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-10 12:20 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் உரத்தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாக்கடை புருஷோத்தமன் தலைமை தாங்கினார். நாத்தாம்பூண்டி சிவா முன்னிலை வகித்தார்.

அப்போது விவசாயிகள் நெற்றியில் நாமம் அணிந்து கையில் பித்தளை சொம்பை ஏந்தியபடியும், "கோவிந்தா, கோவிந்தா" என்று கோஷங்கள் எழுப்பியபடியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரம் தட்டுபாடின்றி வழங்க வேண்டும். யூரியாவுடன் இணை பொருட்களை கூடுதலாக விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்.

கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் அனைத்து உரக்கடைகளிலும் உரங்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா என்று கண்டறிய ஆய்வு செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.

இதுகுறித்து வாக்கடை புருஷோத்தமன் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் சம்பா நடவு முடிந்து 20 நாட்களில் முதல் நாட்களில் முதல் தவணை யூரியா மேலுரமாக இட வேண்டும்.

நெல் மற்றும் கரும்பிற்கு தேவையான யூரியா மூட்டையில் 77 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. எனவே யூரியா உரத்தை தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும்.

மேலும் யூரியாவுடன் இணை பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்