கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி கலெக்டர் அலுவலகம் வந்த விவசாயிகள்

தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு விவசாயிகள் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டியபடி வந்து, கடன் தள்ளுபடி செய்ய வலியுறுத்தினர்.;

Update: 2023-05-31 18:32 GMT

தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு விவசாயிகள் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டியபடி வந்து, கடன் தள்ளுபடி செய்ய வலியுறுத்தினர்.

குறைதீர்க்கும் கூட்டம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்துராஜா, கூட்டுறவு இணைப்பதிவாளர் தமிழ்நங்கை, நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, குருங்குளம் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி செந்தில்குமாரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோமதிதங்கம், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நளினி மற்றும் அனைத்துதுறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் தீபக்ஜேக்கப் பேசியதாவது:-

தஞ்சைமாவட்டத்தில் நடப்பு குறுவை பருவத்தில் இதுவரை 24 ஆயிரத்து 36 எக்டேர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறுவை பருவத்திற்கு ஏற்ற குறுகிய கால நெல் விதைகள் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கூட்டுறவுத்துறை மூலம் 2023-24-ம் ஆண்டிற்கு ரூ.456.65 கோடி கடன் வழங்க நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டில் தஞ்சை மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் கடந்த 26-ந்தேதி வரை ரூ.14.37 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மின்மாற்றிகள் பழுது

தஞ்சை மாவட்டத்தில் பழுதான மின் மாற்றிகள் உடனுக்குடன் பழுது நீக்கம் செய்து சீரான மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு இதுவரை 7 லட்சத்து 42 ஆயிரத்து 680 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் பாசன வாய்க்கால்கள், ஆறுகள் தூர்வாரும் பணி 1068 கி.மீ. நீளத்துக்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 891 கி.மீ. நீளத்துக்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

கழுத்தில் தூக்கு கயிறு

முன்னதாக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநிலத் துணைத் தலைவர் சுகுமாறன் தலைமையில் விவசாயிகள் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டியபடி கூட்டத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் கோஷமிட்டபடி கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டு வெளியே வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய, மாநில, கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய அனைத்து கடன் மற்றும் கல்வி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். கடந்த பிப்ரவரியில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். உர விலையை குறைக்க வேண்டும். கரும்பு டன் ஒன்றிற்கு ரூ.4 ஆயிரமும், நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2500-ம், பருத்தி குவிண்டால் ஒன்றிற்கு ரூ.10 ஆயிரம் என அறிவிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின்போது விவசாயிகள் கோஷங்கள் எழுப்பினர்.

நெற்றியில் பட்டை நாமம்

இதே போல் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் பங்கேற்ற விவசாயிகள் நெற்றியில் பட்டை நாமம் அணிந்தபடி வந்து மனு அளித்தனர். அதில், கூட்டுறவு சங்கத்தின் மூலம் பெறப்படும் கடனை ஓராண்டுக்குள் செலுத்துவதற்கு அரசு உத்தரவிடவேண்டும். தூர்வாரும் பணியை காலத்தோடு முழுயைமாக முடிக்க வேண்டும். பல வாய்க்கல்கள் தூர்வாரப்படாமல் உள்ளன. அவற்றை தண்ணீர் திறப்பதற்குள் தூர்வார வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்