விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு விவசாயிகள் சாலை மறியல்
விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா். ஒரு மூட்டைக்கு ரூ.50 லஞ்சம் கேட்பதாக புகார் தொிவித்தனா்.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது பற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் மற்றும் போலீசார், வருவாய் ஆய்வாளர் தெய்வீகன், கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீதர், விற்பனை கூட கண்காணிப்பாளர் தீபக், விற்பனை கூட செயலாளர் ரவி ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது விவசாயிகள் கூறுகையில், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் போதிய சாக்கு இல்லாததால் நெல் கொள்முதல் செய்யவில்லை. மேலும் விற்பனை கூடத்தில் பணிபுரிபவர்கள், நெல் கொள்முதல் செய்ய ஒரு மூட்டைக்கு ரூ.30 முதல் ரூ.50 வரை லஞ்சம் கேட்கிறார்கள். லஞ்சம் கொடுக்காவிட்டால் நெல் கொள்முதல் செய்ய மறுக்கிறார்கள். விளை பொருட்களுக்கும் உரிய விலையை வியாபாரிகள் நிர்ணயிப்பதில்லை. குறித்த நேரத்தில் கொள்முதல் செய்யாததால் விளைபொருட்களுடன் 2 நாளாக காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது என்றனர்.
அதற்கு விற்பனை கூட செயலாளர் ரவி, விவசாயிகளின் புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகவும், கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும் கூறினார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.