நிரந்தர ஆணை வெளியிட வேண்டி விவசாயிகள் மனு
வைகையிலிருந்து கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்க நிரந்தர ஆணை வெளியிட வேண்டி விவசாயிகள் மனு அளித்தனர்.;
காரியாபட்டி,
வைகையிலிருந்து கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்க நிரந்தர ஆயக்கட்டுதாரர்களாக ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று நரிக்குடி பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அர்ச்சுனன், மாநில துணைத்தலைவர் மச்சேஸ்வரன் ஆகியோர் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார பிரிவு தலைமை பொறியாளர் ஞானசேகரனை சந்தித்து மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- ஒன்றுபட்ட ராமநாதபுரம் மாவட்டம் வைகை பூர்வீக பாசனத்தின் பிரதானமான ஆயக்கட்டு பகுதியாகும். நிர்வாக வசதிக்காக ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை என 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. மாவட்ட எல்லைகள் பிரிக்கப்பட்டாலும் கிருதுமால் பாசன உரிமை ஆயக்கட்டுகளில் பரம்பரை பரம்பரையாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலத்தில் தண்ணீர் திறப்பது குறித்து தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படாமல் சுமூகமான முறையில் தீர்வு காண நிரந்தர தீர்வாக அமையும் என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். எனவே கிருதுமால் நதியில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு நிரந்தர ஆணை வெளியிட கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.