விவசாயிகள் பயப்பட தேவையில்லை

கர்நாடகாவில் இருந்து தேவையான தண்ணீரை கேட்டு பெற நடவடிக்கை எடுத்து வருவதால் விவசாயிகள் பயப்பட தேவையில்லை என்று கடலூரில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.;

Update: 2023-07-05 19:19 GMT

கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசன பகுதிகளான பரங்கிப்பேட்டை, மேல்புவனகிரி, கீரப்பாளையம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி ஆகிய பகுதிகளில் குறுவை தொகுப்பு திட்டம் ரூ.8 கோடியே 28 ஆயிரம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தை நேற்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்து, 396 பயனாளிகளுக்கு மொத்தம் 67 லட்சத்து 197 ரூபாய் மதிப்பில் கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, விவசாய இடுபொருட்கள், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பயப்பட தேவையில்லை

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையை கடந்த ஜூன் 12-ந்தேதி திறந்து வைத்தார். அதற்கு முன்னதாக, அந்த தண்ணீர் விவசாயத்திற்கு முழுமையாக கிடைக்கும் வகையில் கால்வாய் தூர்வாரும் பணிகள் 100 சதவீதம் முடிவடைந்தது.

கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 5 லட்சம் ஹெக்டேர் அளவிற்கு குறுவை சாகுபடி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகா நமக்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை கேட்டு பெறும் நடவடிக்கையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். ஆகவே விவசாயிகள் பயப்பட தேவையில்லை. தண்ணீர் வரும்.

மானியத்தில் விதைகள்

குறுவை சாகுபடியை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு 3 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில், 2½ லட்சம் ஏக்கருக்கு தேவையான ரசாயன உரங்கள் முழு மானியத்தில் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் 1 லட்சத்து 24 ஆயிரம் ஏக்கருக்கு தேவையான விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்க இருக்கிறோம். கடலூர் மாவட்டத்திற்கு 30 ஆயிரம் ஏக்கருக்கு உரம் முழு மானியத்தில் கொடுக்கப்படுகிறது. மாற்று பயிர் செய்வதற்கு 2812 ஏக்கருக்கு 50 சதவீத மானியத்தில் விதைகள் வழங்கப்படுகிறது. 14 ஆயிரத்து 550 ஏக்கருக்கு 12 சதவீத மானியத்தில் நெல் விதைகள் வழங்கப்படுகிறது.

வரத்து குறைவால்தக்காளி விலை உயர்வு

மழையின் காரணமாக வரத்து குறைவால் தக்காளி விலை உயர்ந்துள்ளது. கூட்டுறவு துறை மூலம் தக்காளி கிலோ ரூ.60-க்கு வழங்கி வருகிறோம். விலையை குறைக்க அனைத்து சீசனிலும் காய்கறிகள் விளைய வைப்பதற்கு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களிடம் ஆலோசனை நடத்த இருக்கிறோம்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார். பேட்டியின் போது மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், எம்.எல்.ஏ.க்கள் வேல்முருகன், சபா.ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், சிந்தனைச்செல்வன், மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், கூடுதல் கலெக்டர் மதுபாலன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்