விளை நிலத்தை உழவு செய்யும் பணியில் விவசாயிகள்
பருத்தி சீசன் முடிந்ததால் நெல் விதைப்புக்காக விளைநிலத்தை விவசாயிகள் டிராக்டர் மூலம் உழவு செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.;
கீழக்கரை,
பருத்தி சீசன் முடிந்ததால் நெல் விதைப்புக்காக விளைநிலத்தை விவசாயிகள் டிராக்டர் மூலம் உழவு செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
பருத்தி சீசன் முடிவடைந்தது
ராமநாதபுரம் மாவட்டம் வறண்ட மாவட்டம் என்று அழைக்கப்படுவது மட்டுமில்லாமல் வானம் பார்த்த பூமி என்று தான் சொல்ல வேண்டும். அதுபோல் ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை நெல் விவசாயம் என்பது மிக குறைவு தான். நெல் விவசாயத்தை விட மிளகாய், பருத்தி உள்ளிட்ட விவசாயமே அதிகமாக நடைபெற்று வருகின்றது.
அதுபோல் ஆண்டுதோறும் மிளகாய் மற்றும் பருத்தி விவசாயம் பிப்ரவரி மாதத்தில் இருந்து தொடங்கி ஜூலை, ஆகஸ்டு மாதத்தில் முடிந்து விடும். இந்த நிலையில் இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், சிக்கல், தேரிருவேலி, இதம்பாடல், தாழியாரேந்தல், மல்லல் உள்ளிட்ட பல ஊர்களிலும் பருத்தி மற்றும் மிளகாய் விவசாயம் தீவிரமாக நடைபெற்று வந்தது.
உழவு பணி
இதில் மிளகாய் விவசாயம் கடந்த மாதத்துடன் முடிவடைந்து விட்டது. தற்போது பருத்தி விவசாயம் ஒரு சில ஊர்களில் மட்டும் நடைபெற்று வருகிறது.இதனிடையே பருத்தி விவசாயமும் முடிவடையும் தருவாயில் உள்ளதோடு ஆடி மாதம் பிறந்து 10 நாட்களை கடந்து விட்டதால் முதுகுளத்தூர் அருகே சிக்கல், இதம்பாடல் உள்ளிட்ட பல கிராமங்களில் நெல் விதைப்பு பணிக்கான முன்னேற்பாடு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதம்பாடல் கிராமத்தில் நடப்பட்டிருந்த பருத்தி செடிகள் முழுமையாக அகற்றப்பட்டு அந்த இடத்தில் நெல் விதைகளை தூவுவதற்காக டிராக்டர் மூலம் உழும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதே போல் பல கிராமங்களிலும் டிராக்டர் மூலம் நெல் விதைகளை தூவுவதற்கான விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசனில் அதிகளவு மழை பெய்ததால் நெல் விவசாயமும் அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.