அருமடல்- பேரளி சாலையை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

அருமடல்- பேரளி சாலையை சீரமைக்க வனத்துறை, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-09-23 18:30 GMT

அருமடல்- பேரளி சாலை

பெரம்பலூர்- அரியலூர் தேசிய நெடுஞ்சாலையின் பேரளி கிராமத்தில் இருந்து அருமடல் செல்லும் சாலையை ஏராளமானோர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த சாலையின் வழியே அருமடல், செங்குணம், சிறுகுடல், கீழப்புலியூர், வாலிகண்டபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு மக்கள் சென்று வருகின்றனர். அதோடு பேரளி மற்றும் அருமடல் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் அன்றாட பணிகளுக்காகவும் பயன்படுத்துகின்றனர். சுமார் 4 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சாலை பேரளி பகுதியில் சுமார் 600 மீட்டர் நீளத்திற்கு கடந்த 2019-ம் ஆண்டில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. அதேபோல அதே ஆண்டில் அருமடல் பகுதியில் உள்ள சுமார் 2.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இடைப்பட்ட சுமார் 1 கி.மீ. பகுதியில் 400 மீட்டர் நீளத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லி, மண் கொண்டு சாலை அமைக்கப்பட்டது.

உலகங்காத்தான் ஓடை

மீதமுள்ள பகுதிகளில் மழைக்காலத்தில் மக்கள் பயணிக்க மிகவும் சிரமமாக உள்ளது. சில நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்லும் விவசாயிகள் சறுக்கி விழும் அபாயமும் உள்ளது. அதோடு இந்த சாலையின் பேரளி பகுதியில் கவுள்பாளையம், பேரளி உள்ளிட்ட காடுகளில் இருந்து எழுமூர் ஏரிக்கு நீரைக் கொண்டு சேர்க்கும் உலகங்காத்தான் ஓடை செல்கிறது.

மழைக்காலத்தில் வெள்ளம் ஓடும்போது இந்த ஓடையை கடக்க முடியாத சூழ்நிலையும் உள்ளது. ஓடையில் தண்ணீர் ஓடும் போது அதில் சென்று வரும் வாகனங்களும் பழுதாகிறது. தார்ச்சாலை அமைக்கப்படாத இந்த 1 கி.மீ. வனப்பகுதியில் வருகிறது. மழைக்காலத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுக்கும் இந்த சாலையை சீரமைக்க பேரளியில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் பல முறை கோரிக்கை வைக்கப்பட்டும், மாவட்ட நிர்வாகத்திற்கு மனுக்கள் கொடுத்து தீர்வுக்காக விவசாயிகள் காத்துக் கொண்டுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

மேம்பாலம் அமைக்க வேண்டும்

மாயவேல்:- நூற்றுக்கணக்கான விவசாயிகள் அருமடல்- பேரளி சாலையை அன்றாடம் பயன்படுத்துகிறோம். கவுள்பாளையம், பேரளி பகுதி காடுகளில் இருந்து மழை நீரை சித்தளி வழியாக எழுமூர் பெரிய ஏரிக்கு கொண்டு சேர்க்கும் உலகங்காத்தான் ஓடை இந்த சாலையின் குறுக்காக செல்கிறது. மழைக்காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அந்த சமயத்தில் கால்நடைகள், மனிதர்கள் என யாருமே கடக்க முடியாது. தண்ணீர் வற்றிய பின்னர் தான் கடக்க முடியும். மேலும் பல மாதங்கள் தண்ணீர் குறைந்த அளவேனும் ஓடிக்கொண்டிருக்கும் இந்த ஓடையில் செல்லும் இருசக்கர வாகனங்கள் பழுதாகி வருகிறது. எனவே இந்த ஓடையின் குறுக்கே மேம்பாலம் அமைத்துக் கொடுத்தால் விவசாயிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

தார்ச்சாலை

ராமசாமி:- சுமார் 4 கி.மீ. நீளமுள்ள பேரளி- அருமடல் சாலையின் இரண்டு தலைப்பகுதிகளிலும் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இடைப்பட்ட சுமார் 1 கி.மீ. பகுதி மட்டும் சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் ஏற்கனவே ஓடைகள் உள்ளதால் மரங்களை அகற்றவோ, புதிதாக வாய்க்கால் எடுக்கவோ தேவையிருக்காது. வனக்காப்புக்காட்டின் வழியாக செல்லும் இந்த சாலையானது பேரளி ஊராட்சி எல்லையில் உள்ளது. ஆகையினால் வனத்துறை, பேரளி ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து எளிய மக்களின் வலியை உணர்ந்து விரைந்து தார்ச்சாலை அமைத்துக் கொடுக்க முன்வர வேண்டும்.

சீரமைக்க கோரிக்கை

தர்மலிங்கம்:- இந்த சாலையை அன்றாடம் விவசாயப் பணிகளுக்காக பயன்படுத்தி வருகிறோம். இந்த சாலையின் அருமடல் எல்லை முடியும் பகுதியில் சுமார் 100 மீட்டர் தூரம் காடுகளில் இருந்து வரும் தண்ணீர் அரித்து சாலை மிகவும் மோசமாக இருந்ததால் பலர் வண்டிகளில் இருந்து விழும் நிலை இருந்தது. இந்த நிலையில் பல முறை கோரிக்கை வைத்தும் சீர்செய்யப்படாத காரணத்தினால் அப்பகுதி விவசாயிகள் இணைந்து ரூ.60 ஆயிரம் நிதி திரட்டி அந்த பகுதி சாலையில் 4 பாலங்கள் அமைத்து மண் அடித்து சாலையை சீர் செய்தோம். இப்பொழுது கூட இதே சாலையின் சில இடங்களில் வாகனங்களில் பயணிக்க மிகவும் சிரமமாக இருந்தது. எனவே விவசாயிகள் இணைந்து மண் கொட்டி ஓரளவு சாலையை சீர் செய்தோம். அரசு இந்த சாலையை விரைந்து சீரமைக்க முன்வர வேண்டும்.

கால்நடை தீவனம்

மனோகரன்:- அருமடல்- பேரளி சாலையை விவசாயிகள் அதிகளவு பயன்படுத்துகிறோம். கால்நடைகளுக்கு தினந்தோறும் புல், தீவனப் பயிர்கள் உள்ளிட்டவைகளை இருசக்கர வாகனங்கள் மூலம் கொண்டு வருகிறோம். மழைக்காலத்தில் இந்த ஓடை மற்றும் தார்ச்சாலை அமைக்கப்படாத பகுதியில் கால்நடைகளுக்கு உணவு கொண்டு வருவது மிகுந்த சவாலாக இருக்கிறது. குறிப்பாக பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சாலையின் குண்டும் குழியுமான பகுதிகளால் மற்ற நாட்களும் இந்த சாலையை விவசாய பணிகளுக்காக பயன்படுத்துவது சிரமமாகவே உள்ளது. எனவே இந்த சாலையை விரைந்து சீரமைக்க வனத்துறை, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்