மானியத்தில் நீர் சேகரிப்பு அமைப்பு-பசுமைக்குடில் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

மானியத்தில் நீர் சேகரிப்பு அமைப்பு-பசுமைக்குடில் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-07-04 19:02 GMT

மண்புழு உர கூடாரம்

தேசிய தோட்டக்கலை இயக்கத்திட்ட செயலாக்கத்திற்கு அரியலூர் மாவட்டத்திற்கு 2023-24-ம் நிதியாண்டில் உத்தேச பொருள் இலக்கீடாக 6,364 எக்டேர் மற்றும் நிதி இலக்கீடாக ரூ.448 லட்சம் பெறப்பட்டுள்ளது. இதில் விவசாயிகள் பயனடையும் வகையில் பரப்பு விரிவாக்க இனத்தின் கீழ் காய்கறி குழித்தட்டு நாற்றுகள், சம்மங்கி சாகுபடி, மா, பலா, கொய்யா, பப்பாளி, எலுமிச்சை, பழக்கன்றுகள், முந்திரி ஒட்டுச்செடிகள் மற்றும் முந்திரி பழைய தோட்டம் புதுப்பித்தல் போன்றவை அடங்கும்.

மேலும் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்காக நீர் சேகரிப்பு அமைப்பு, வீரிய ரக காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க நிழல் வலைக்குடில், பசுமைக் குடில், நிலப்போர்வை போன்றவை 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளன. இயற்கை விவசாயிகளுக்கு அங்ககப் பண்ணையம், இடுபொருட்கள் வழங்குதல், நிரந்தர மண்புழு உர கூடாரம் அமைத்தல் போன்றவை 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளன.

50 சதவீத மானியத்தில்...

தேனீப்பெட்டிகள், தேனீக்கள் மற்றும் தேன் எடுப்பதற்கான உபகரணங்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் விளை பொருட்களை அறுவடை செய்த பின்பு சேமிப்பு மற்றும் தரம் பிரிப்பதற்கு சிப்பம் கட்டும் அறை அமைக்க 50 சதவீத மானியம் இலக்கீடு பெறப்பட்டுள்ளது. வெங்காய சாகுபடி செய்யும் விவசாயிகள் அறுவடைக்கு பின்பு சேமித்து வைப்பதற்காக குறைந்த செலவிலான வெங்காய சேமிப்பு அமைப்பு 50 சதவீத மானியத்தில் பணி முடித்தவுடன் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டு பின்னேற்பு மானியமாக வழங்கப்பட உள்ளது.

காய்கறி மற்றும் மலர்களை இருப்பு வைத்து வினியோகிக்க 100 மெ.டன் கொள்ளளவு கொண்ட குளிர்சாதன அறை மற்றும் பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்வதற்காக நடமாடும் காய்கறி விற்பனை வண்டி 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. மேலும் சிறப்பு செயலாக்க திட்டத்தில் முந்திரி விவசாயிகளுக்கு முந்திரி வெட்டும் எந்திரம், முந்திரி பிரிப்பான் ஆகியவை மானியத்தில் வழங்கப்பட உள்ளன.

விண்ணப்பிக்கலாம்

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பம் உள்ள விவசாயிகள் தங்களது நிலத்திற்கான சிட்டா, அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மூலமாகவோ அல்லது விவசாயிகள் தாங்களாகவே www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்