தேங்காய், காலி மதுபாட்டில்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்த விவசாயிகள்

தென்னை விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்று கோரி தேங்காய் மற்றும் காலி மதுபாட்டில்களுடன் வந்து விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2023-07-10 19:30 GMT

தென்னை விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்று கோரி தேங்காய் மற்றும் காலி மதுபாட்டில்களுடன் வந்து விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.


குறைதீர்ப்பு கூட்டம்


கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொது மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அவர், அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிச்சாமி தலைமையில் ஆறுச்சாமி, சதாசிவம், மூர்த்தி, மயில்சாமி, தங்கவேல் உள்பட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைகளில் காலி மதுபாட்டில்கள், தேங்காய், தென்னை ஓலையு டன் வந்து மனு அளித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது சு.பழனிச்சாமி நிருபர்களிடம் கூறியதாவது:-


தென்னை விவசாயம்


தென்னையில் வெள்ளை ஈக்கள், கூன்வண்டு தாக்குதல், ஈரியோ பைட் நோய் தாக்குதல், வறட்சி, கூலி உயர்வு உள்ளிட்ட பிரச்சி னைகளால் தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

விவசாயிகளிடம் இருந்து ஒரு தேங்காய் ரூ.6 முதல் ரூ.7-க்கு வாங் கப்படுகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த 25 ஆண்டுகளாக தேங்காய்க்கு இதே விலை நீடிக்கிறது. ஆனால் டாஸ்மாக் மதுக்கடைகளில் ஸ்டிக்கருடன் கொடுக்கப் படும் காலி மது பாட்டிலுக்கு கூட 10 ரூபாய் கொடுக்கப்படுகிறது.


அதை தெரிவிக்கும் வகையில் தான் காலி மதுப்பாட்டில்கள் மற்றும் தேங்காயுடன் மனு அளிக்க வந்தோம். மத்திய, மாநில அரசுகள் ஒரு கிலோ கொப்பரை தேங்காய் ரூ.150-க்கு விலை நிர்ணயம் செய்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

அரசே தேங்காய்களை கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்து, தென்னை விவசாயம், விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார்.


மதுக்கடைகளால் அவதி


மக்கள் நீதிமய்யம் கட்சி சாா்பில் இருகூர் தனபால் அளித்த மனுவில், இருகூர்-ஒண்டிப்புதூா் மேம்பாலம் அருகே ஏ.ஜி.புதூர் ரோடு, இருகூர்-சின்னியம்பாளையம் ரோடு ஆகிய 2 இடங்களில் 3 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன.

இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள். எனவே அந்த மதுக்கடைகளை அகற்ற நடவடிக் கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.


கோவை புலியகுளத்தை சேர்ந்த வளர்பிறை கபடி கழகத்தை சேர்ந்த வீராங்கனைகள் அளித்த மனுவில், கபடி விளையாட மற்றும் பயிற்சி எடுக்க அனைத்து வசதிகளுடன் தனி மைதானம் அமைத்து தர வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.


உதவித்தொகை


ம.தி.மு.க.வை சேர்ந்த 26-வது வார்டு கவுன்சிலர் சித்ரா வௌ்ளியங்கிரி அளித்த மனுவில், பீளமேடு ரெயில்வே பாலத்தின் கீழ் சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை தெற்கு தாலுகா அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை கடந்த 4 மாதமாக வழங்கப்படுவது இல்லை.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நேரத்தில் உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.


கள்ளிமடை பகுதி மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியை சேர்ந்த 78 பேருக்கு 6 மாதங்களுக்கு முன்பு வெள்ளலூர் கிராமத்தில் வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.

ஆனால் இதுவரை இடம் ஒதுக்கீடு செய்து தரவில்லை. அதை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

பீப்பிள் ஆப் சொசைட்டி அமைப்பினர் அளித்த மனுவில், கோவையில் கனிம வளங்களை வெட்டி எடுத்து கடத்துவதை அதிகாரிகள் உடனடியாக தடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.


மேலும் செய்திகள்