வாய்க்காலில் பாலம் கட்டக்கோரி விவசாயிகள் சாலைமறியல்

வாய்க்காலில் பாலம் கட்டக்கோரி விவசாயிகள் சாலைமறியல்

Update: 2023-06-26 18:45 GMT

வலங்கைமான் அருகே வாய்க்காலில் பாலம் கட்டக்கோரி விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நெடுஞ்சாலை பணிகள்

வலங்கைமான் அருகே நார்த்தாங்குடி கிராமத்தின் வழியாக தஞ்சையில் இருந்து திருவாரூருக்கு நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக வெண்ணாற்றிலிருந்து குருவாடி கிராமத்தில் பாசன வடிகால் வாய்க்காலுக்கு தண்ணீர் வருவது தடைபட்டுள்ளது. மேலும் தென்குவளைவேலி, குருவாடி, சாத்தனூர், எருமைப்படுகை, தேவமங்கலம் உள்ளிட்ட 6 கிராமங்களில் பாசனம் தடைபட்டுள்ளது.

சாலைமறியல்

சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்காத நிலையில் விவசாயிகள் தவித்து வருகின்றனர். எனவே தேசிய நெடுஞ்சாலை பணி காரணமாக வெண்ணாற்றிலிருந்து குருவாடி கிராமத்தில் உள்ள பாசனம் மற்றும் பணிகள் வாய்க்காலுக்கு தண்ணீர் வராமல் தடைபட்டுள்ள நீர் வழித்தடத்தை சீரமைத்து அதில் பாலம் கட்டித்தரக்கோரி 6 கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நார்த்தங்குடியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மன்னார்குடி- கும்பகோணம் மெயின் ரோட்டில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்ததும் வலங்கைமான் தாசில்தார் அன்பழகன் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் விரைவில் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல தடைப்பட்டுள்ள நீர் வழித்தடத்தை சீரமைத்து பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்