சம்பா விதை நெல் தட்டுப்பாட்டால் விவசாயிகள் கவலை

சீர்காழி பகுதியில் சம்பா விதை நெல் தட்டுப்பாட்டால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-09-24 18:45 GMT

சீர்காழி:

சீர்காழி பகுதியில் சம்பா விதை நெல் தட்டுப்பாட்டால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பா சாகுபடி

சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட சீர்காழி திருவெண்காடு, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில், திருமுல்லைவாசல், வேட்டங்குடி, கொண்டல், அகனி, திருப்புங்கூர், கதிராமங்கலம், எடக்குடி வடபாதி, மங்கைமடம், திட்டை, தில்லைவிடங்கன், எடமணல், உள்ளிட்ட அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள விவசாயிகள் சம்பா சாகுபடிக்காக நிலங்களை உழுது தயார் நிலையில் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் இதனால் வரை காவிரி கடைமடை பகுதிகளுக்கு வந்து சேரவில்லை. இருந்தபோதும் விவசாயிகள் காவிரிநீர் மற்றும் மழை நீரை நம்பி நாற்றங்கால் மற்றும் நேரடி விதைப்புக்கு தயாராகி வருகின்றனர்.

விதை நெல்

இந்த நிலையில் சீர்காழி பகுதிகளில் உள்ள வேளாண் விற்பனை மையங்களில் சம்பா விவசாயிகளுக்கு தேவையான ஆடுதுறை 38, கோ 46 உள்ளிட்ட நெல் ரக விதைகள் இல்லாததால் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்யும் பணி பாதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஒரு சில விவசாயிகள் கூடுதல் விலை கொடுத்து தனியார் கடைகளில் மேற்கண்ட நெல் ரகங்களை வாங்கி நாற்றங்கால் மற்றும் நேரடி நெல் விதைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் விவசாயிகளுக்கு கூடுதல் செலவாகி வருவதாக அவர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

கூடுதல் விலை

இதுகுறித்து அகனி கிராமத்தை சேர்ந்த விவசாயி அன்பழகன் கூறுகையில், சீர்காழி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு நிலங்களை தயார் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு வேளாண் விற்பனை மையங்களில் வறட்சி மற்றும் மழை வெள்ளங்களை தாக்குப் பிடிக்க கூடிய ஆடுதுறை 38, கோ 46 உள்ளிட்ட சம்பா ரக விதை நெல்கள் இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஒரு சில விவசாயிகள் வேளாண் விற்பனை மையங்களில் 50 கிலோ சிப்பம் ரூ. ஆயிரத்து 400 க்கு வாங்க வேண்டிய விதை நெல்லை தனியார் நிறுவனத்தில் 30 கிலோ சிப்பம் ரூ. ஆயிரத்து 70-க்கு வாங்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. அரசிடம் கிடைக்காத விதை நெல் தனியார் கடைகளில் கிடைப்பது ஆச்சரியமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் அனைத்து வேளாண்மை விற்பனை மையங்களிலும் மேற்கண்ட விதைநெல் தட்டுப்பாடின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் இந்த ஆண்டு சம்பா சாகுபடி செய்வது கேள்விக்குறியாகிவிடும் என வேதனையோடு தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்