உளுந்து சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

கரும்புக்கு ஊடுபயிராக உளுந்து சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

Update: 2022-12-23 18:45 GMT

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள லக்கிநாயக்கன்பட்டி, புதுப்பட்டு, புளியங்கோட்டை, புதூர், கானாங்காடு, கடுவனூர், அத்தியூர், அரியலூர், மைக்கேல்புரம், சவேரியார்பாளையம், மேல்சிறுவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் நெல், கரும்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா, உளுந்து பயிர்கள் மற்றும் பூக்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள்.

தற்போது இப்பகுதிகளில் கனமழை பெய்ததையடுத்து நீர்நிலைகளில் அதிகளவில் தண்ணீர் உள்ளதாலும், இப்பகுதிகளில் ஓடும் ஆறுகளில் அதிக அளவில் தண்ணீர் செல்வதாலும் இப்பகுதி விவசாயிகள் பிரதான பயிராக கரும்பு பயிரை அதிக அளவில் பயிரிட்டு பராமரித்து வருகின்றனர். மேலும் பனிப்பொழிவு இருப்பதால் சில பகுதிகளில் காலிபிளவர், காய்கறி பயிர்களையும் சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். ஆண்டு பயிரான கரும்புக்கு இடையே ஊடுபயிராக மக்காச்சோளம், உளுந்து உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் சிலர் கூறும்போது, கடந்த சில வருடங்களுக்கு முன்பு தண்ணீர் பற்றாக்குறை நிலவியதால் கரும்பு நடவு செய்ய முடியாத நிலை இருந்தது. ஆனால் கடந்த 2 வருடங்களாக அதிக அளவில் மழை பெய்ததால் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்து கிணறுகளில் அதிகளவில் தண்ணீர் உள்ளது. இதை பயன்படுத்தி நாங்கள் கரும்பு, மரவள்ளி, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களில் ஊடுபயிராக உளுந்து உள்ளிட்ட இதர பயிர்களையும் சாகுபடி செய்து வருகிறோம். இதனால் ஒரே நேரத்தில் இரண்டு பயிர்களுக்கும் தண்ணீர் கிடைக்கிறது. கரும்பு பயிர் 10 மாதங்களுக்கு பிறகு அறுவடை செய்யும் நிலையில் உளுந்து மற்றும் மக்காச்சோளம் உள்ளிட்ட சில பயிர்களை 3 மாதங்களுக்குள் அறுவடை செய்து விடுவதால் வீட்டு தேவைக்கு போக மீதுமுள்ளவற்றை விற்பனைக்கு கொண்டு செல்கிறோம் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்