வெற்றிலை கொடிக்கால் சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்

வெற்றிலை கொடிக்கால் சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்

Update: 2022-11-10 19:50 GMT

பண்டாரவாடை பகுதியில் வெற்றிலை கொடிக்கால் சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கும்பகோணம் வெற்றிலை

தமிழகத்தில் வெற்றிலைக்கு பெயர் பெற்றது கும்பகோணம் வெற்றிலை. கும்பகோணம் வெற்றிலைக்கு என தனி மவுசு உண்டு. பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடை, ராஜகிரி, கோவில்தேவராயன் பேட்டை, பட்டீஸ்வரம், ஆவூர், கோவிந்தகுடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெற்றிலை கொடிக்கால் அமைக்கப்பட்டு அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இங்கு விளைவிக்கக் கூடிய வெற்றிலை விற்பனைக்காக கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இயற்கை பேரிடர், புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றம் காரணமாக வெற்றிலை சாகுபடி தற்போது வெகுவாக குறைந்துவிட்டது.

வெற்றிலை கொடிக்கால் சாகுபடி பணி

தற்போது ராஜகிரி, பண்டாரவாடை, கோவில்தேவராயன்பேட்டை, வன்னியடி உள்பட பாபநாசம் சுற்று வட்டார பகுதியில் விவசாயிகள் வெற்றிலை கொடிக்கால் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ராஜகிரி பகுதியில் வெற்றிலைக்கு என தனி சந்தையே இயங்கி வருகிறது. பண்டாரவாடை, ராஜகிரி, கோவில்தேவராயன்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் விளைவிக்கக்கூடிய வெற்றிலை கொடிக்கால்களில் இருந்து சேகரிக்கப்படும் வெற்றிலையை தினசரி சந்தைக்கு கொண்டு வரப்பட்டு ஏலம் அடிப்படையில் விற்பனை செய்வது உண்டு. இங்கு மொத்த ஏலத்தில் எடுக்கப்படும் வெற்றிலைகள் தேவைக்கேற்ப வெளி மாவட்டங்களுக்கு பிரித்து விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், ஒரு ஏக்கர் வெற்றிலை சாகுபடி செய்ய குறைந்தது ரூ.5 லட்சம் வரை செலவாகும். ஒரு ஏக்கருக்கு 450 பட்டங்கள் பிரிக்கப்பட்டு வெற்றிலை கொடிக்கால் நடவு செய்யப்படுகிறது. வெற்றிலை நடவு செய்வதற்கு முன்பு செம்மங்கி கீரை, அகத்திகீரை மற்றும் முருங்கை கீரை விதைகள் விதைக்கப்படுகின்றன. அவை முளைத்து ஓரளவு வளர்ந்த 30 நாட்களுக்கு பிறகே வெற்றிலை கொடி நடவு செய்யப்படுகிறது.

பயிர் காப்பீடு செய்ய அனுமதி

வெற்றிலை கொடி நடவு செய்யப்பட்ட 6 மாதத்தில் இருந்து வெற்றிலையை கிள்ள முடியும். மூன்றிலிருந்து நான்கு ஆண்டுகள் வரை வெற்றிலை மகசூல் எடுக்கலாம். அதன்பிறகு வெற்றிலை கொடிக்கால் அழிக்கப்பட்டு புதிதாக வெற்றிலை கொடிக்கால் அமைக்கப்பட்டு வெற்றிலை நடவு செய்யப்படும். ஆனால் புயல், கடும் மழை பொழிவு காலங்களில் வெற்றிலை சாகுபடி பெரிய அளவில் பாதிக்கப்படும். அப்போது அரசு சார்பில் வெற்றிலை சாகுபடி விவசாயிகளுக்கு எந்தவித நிவாரணம் வழங்கப்படுவதில்லை. எனவே வெற்றிலை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்ய அரசு அனுமதிக்க வேண்டும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்