மழைநீர் வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
மழைநீர் செல்லும் வரத்து கால்வாய்களில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த கோட்ட அளவிலான குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.;
மழைநீர் செல்லும் வரத்து கால்வாய்களில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த கோட்ட அளவிலான குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
தடுக்க வேண்டும்
தர்மபுரி கோட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. உதவி கலெக்டர் கீதாராணி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஏரிகள், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள், கால்வாய்கள் ஆகியவற்றில் அதிக அளவில் குப்பைகள், கட்டிடக்கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் மழை பெய்யும் போது ஏரிகள் குட்டைகளுக்கு தண்ணீர் சீராக சென்று சேர முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் ஏரிகள், குட்டைகள் ஆகியவற்றில் கழிவுகள் கொட்டப்படுவதை முழுமையாக தடுக்க வேண்டும்.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மழைநீர் ஏரிகளுக்கு செல்லும் வரத்து கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும். இந்த கால்வாய்களில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தர்மபுரி கோட்டத்திற்கு உட்பட்ட தாலுகா பகுதிகளில் உள்ள ஏரிகளை வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு தூர்வாரி சீரமைக்க வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள், பயிர் கடன் ஆகியவற்றை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
கூட்டத்தில் உதவி கலெக்டர் கீதாராணி பேசுகையில், ஏரிகள், குட்டைகள் மற்றும் மழைநீர் செல்லும் வரத்து கால்வாய்களில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்துள்ள கோரிக்கைகளை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். கூட்டத்தில், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சேதுலிங்கம், வருவாய், வேளாண்மை, உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.