வள்ளியூரில் விவசாயி கொலை; உடலை வாங்க மறுத்து கலெக்டர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை

வள்ளியூரில் கொலை செய்யப்பட்ட விவசாயி உடலை வாங்க மறுத்து, நெல்லை கலெக்டர் அலுவலகத்தை அவரது உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2022-06-04 19:11 GMT

நெல்லை:

வள்ளியூரில் கொலை செய்யப்பட்ட விவசாயி உடலை வாங்க மறுத்து, நெல்லை கலெக்டர் அலுவலகத்தை அவரது உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

விவசாயி கொலை

வள்ளியூர் அருகே உள்ள வடக்கு ஆச்சியூரை சேர்ந்தவர் நம்பிராஜன். விவசாயி. தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக இவருக்கும், குடும்பத்தினருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த நம்பிராஜனுக்கும், அவருடைய தம்பி ஆறுமுகவேலுவுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் நம்பிராஜன் மண்வெட்டியால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடலை வாங்க மறுப்பு

நம்பிராஜன் உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நேற்று பிரேத பரிசோதனை செய்து உடலை ஒப்படைக்க போலீசார் முயற்சி செய்தனர். ஆனால் குடும்பத்தினர் நம்பிராஜன் உடலை வாங்க மறுத்து விட்டனர். இந்த நிலையில் நம்பிராஜன் மனைவி இசக்கியம்மாள், மகள்கள் ஆறுமுகசெல்வி, பேச்சித்தாய் மற்றும் குடும்பத்தினர், ஊர் மக்கள் திரண்டு நெல்லைக்கு வந்தனர்.

அவர்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோரிக்கை மனு

பின்னர் இதுகுறித்து அவர்கள் கலெக்டர் விஷ்ணு, போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். கோரிக்கை மனு குறித்து நம்பிராஜனின் மகள்கள் கூறியதாவது:-

பூர்வீக சொத்து தொடர்பாக எங்களுடைய தந்தை நம்பிராஜனுக்கும், சித்தப்பாக்கள் சுப்பையா என்ற மணி மற்றும் ஆறுமுகவேல் ஆகியோருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுதொடர்பாக வள்ளியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போதும் போலீசார், ஆறுமுகவேல் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே சம்பவ இடத்தில் இருந்த சுப்பையா என்ற மணி மற்றும் கொலைக்கு தூண்டுதலாக செயல்பட்ட பாட்டி, 2 சித்திகள், அத்தை ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்