தேன்கனிக்கோட்டையில் யானை மிதித்து விவசாயி பலி - உறவினர்கள் சாலை மறியல்

தேன்கனிக்கோட்டையில் யானை மிதித்து விவசாயி உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-02 15:56 GMT

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனச்சகரம் நொகனூர் வனப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக 7 யானைகள் முகாமிட்டு மரகட்டா, நொகனூர், லக்கசந்திரம், மாரசந்திரம் ஆகிய கிராமங்களில் அருகே உள்ள விவசாய நிலங்களில் புகுந்து தக்காளி, பீன்ஸ், தென்னைமர கன்றுகளை தின்று நாசம் செய்து வருகின்றன. பயிர்களை நாசம் செய்து வரும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று மரகட்டா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கடேஷ் (வயது60). இவர் தன்னுடைய மாடுகளை அருகில் உள்ள மரகட்டா வனப்பகுதி அருகே மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். மாடுகள் திரும்பி வராத நிலையில் அவற்றை தேடி சென்ற வெங்கடேசை அங்கு சுற்றித்திரிந்த ஒற்றை யானை தும்பிக்கையால் தூக்கி விசி கொன்றுள்ளது.

இதை அறிந்த வெங்கடேஷ் உறவினர்கள் அவரது சடலத்துடன் தேன்கனிக்கோட்டையில் இருந்து அஞ்செட்டி செல்லும் சாலையில் உள்ள மரக்கட்டா பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து காவல் துணை கண்காணிப்பாளர் முரளி, இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் தேன்கனிக்கோட்டை வனச்சகர அலுவலர் முருகேசன் மற்றும் வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது உயிரிழந்த வெங்கடேஷ் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மரகட்டா கிராமத்தை சுற்றி சோலார் வேலி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்