விவசாயி எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு: தம்பி, மனைவி, மகன் கைது

கரூா் அருேக விவசாயி எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தம்பி அவரது மனைவி, மகன் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-10 18:38 GMT

விவசாயி

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள ராசாகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன் (வயது 72). விவசாயி. இவர் கடந்த 7-ந்தேதி காலை தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். வெகுநேரம் ஆகியும் கருப்பண்ணன் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது உறவினர்கள் தோட்டத்திற்கு சென்ற பார்த்தபோது கருப்பண்ணனின் கால்கள் கட்டப்பட்ட நிலையில், உடல் முழுவதும் எரிந்து பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கருப்பண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து கருப்பண்ணன் மகள் சுப்புலட்சுமி கொடுத்த புகாரின்பேரில், மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

எரித்து கொலை

மேலும் குற்றவாளிகளை பிடிக்க மாயனூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில், கருப்பண்ணனுக்கும், அவரது தம்பி காத்தவராயனுக்கும் (60), தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்வதிலும், நிலப் பிரச்சினை தொடர்பாகவும் தண்ணீா் பாய்ச்சுவது சம்பந்தமாகவும் தகராறு இருந்து வந்துள்ளது.

இந்தநிலையில் கடந்த 7-ந்தேதி தோட்டத்திற்கு வந்து தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த கருப்பண்ணனை அவரது தம்பி காத்தவராயன், மனைவி பழனியம்மாள் (55) ஆகியோர் கட்டையால் தலையில் தாக்கி உள்ளனர். இதில் மயக்கம் அடைந்த கருப்பண்ணனை கை மற்றும் கால்களை வயர் மூலம் கட்டி போட்டு, உடல் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தி உள்ளனர். இதில் உடல் கருகி கருப்பண்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது.

தம்பி, மனைவி, மகன் கைது

இதையடுத்து தென்னிலை பகுதியில் காத்தவராயன், பழனியம்மாள் மற்றும் கொலைக்கு உடந்ைதயாக இருந்த இவா்களது மகன் சக்திவேல் (32) ஆகியோர் பதுங்கி இருப்பதாக நேற்று முன்தினம் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து தனிப்படை போலீசார் தென்னிலைக்கு சென்று அங்கு பதுங்கி இருந்த 3 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்