விட்டில் பூச்சிகளால் மிளகாய் செடிகள் நாசம்

விட்டில் பூச்சிகளால் மிளகாய் செடிகள் நாசமானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Update: 2022-11-20 17:26 GMT

சவேரியார்பட்டினம், 

விட்டில் பூச்சிகளால் மிளகாய் செடிகள் நாசமானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

மானாவாரி விவசாயம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலும் வானம் பார்த்த மானாவாரி விவசாயம் அதிகம் மேற்கொள்ளப்படுகிறது. கண்மாய்கள் உள்ள பகுதிகளில்தான் கண்மாய் நீரினை பயன்படுத்தி விவசாயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக வைகை தண்ணீரையும், வடகிழக்கு பருவ மழையையும் நம்பிதான் இந்த மாவட்ட விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்வது வழக்கம்.

இந்நிலையில் இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக வைகை அணையில் இருந்து உபரி நீர் மற்றும் மாவட்ட கணக்கில் இருந்து நீரும் திறந்துவிடப்பட்டு நீர்நிலைகள் ஓரளவு தண்ணீர் சேர்ந்தன. இந்த ஆண்டு பருவமழைக்கு முன்னதாகவே நீர் நிலைகளில் தண்ணீர் சேர்ந்த நிலையில் தற்போது பருவமழையும் தொடங்கி நன்றாக பெய்து வருகிறது.

இதனால் விவசாயிகள் தங்களின் நிலங்களில் டிராக்டர்கள் மூலம் உழுது விதைத்து மும்முரமாக விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நெல் விவசாயிகளை போலவே மிளகாய் விவசாயிகளும் ஆர்வமுடன் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பல இடங்களில் மிளகாய் விதைத்தும், இன்னும் பல இடங்களில் நாற்று நட்டும் உள்ளனர்.

மிளகாயை அழிக்கும் விட்டில் பூச்சிகள்

இந்த நிலையில் விதைத்த பகுதிகளில் மிளகாய் இலை துளிர் விட்டு வந்த வண்ணம் உள்ளது. இந்த மிளகாய் பயிர்கள் துளிர் விட்டதை பார்த்து மகிழ்ந்த விவசாயிகள் தண்ணீர் தேங்காதவாறு பராமரித்து வருகின்றனர். இவர்களுக்கு பேரதிர்ச்சி அளிக்கும் வகையில் மிளகாய் பயிர்களை விட்டில் பூச்சிகள் வேரோடு துண்டாக்கி சாப்பிட்டு அழித்து வருகின்றன. இதுகுறித்து சவேரியார்பட்டினம் பகுதியை சேர்ந்த விவசாயி மணிவேல்ராஜ் கூறியதாவது:-

எனது நிலத்தில் 1½ ஏக்கரில் மிளகாய் விவசாயம் செய்து வருகிறேன்.

விதைத்த இடத்தில் ஓர் இலை துளிர் விட்ட நேரத்தில் விட்டில் பூச்சிகள் துண்டாக வெட்டி தின்று அனைத்து பயிர்களையும் நாசமாக்கி விட்டது. 3 இலைகள் விட்டிருந்தால் ஒரு இலை இருந்தாலும் பயிர் தப்பித்து வளர்ந்துவிடும். ஒரு இலை விட்ட நிலையிலேயே வேரோடு துண்டாக்கி தின்று சென்றுவிட்டது. இதனால் பெரிய இழப்பு ஏற்பட்டு விட்டது. வேறு வழியின்றி நாற்று வாங்கி நட்டு வருகிறேன். விட்டில் தாக்குதலில் இருந்து காப்பாற்ற வேளாண் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்