தியேட்டர்களில் சென்று சினிமா பார்க்கும் ஆர்வம் குறைந்து வருகிறதா?

தியேட்டர்களில் சென்று சினிமா பார்க்கும் ஆர்வம் குறைந்து வருகிறதா? இதுகுறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Update: 2023-04-09 18:45 GMT

சினிமா பொழுதுபோக்கு மட்டுமல்ல, நமது வாழ்க்கையோடும் உணர்வோடு ஒன்றிப்போன ஒன்று. கீற்றுக்கொட்டகையில் மணல் தரையில் அமர்ந்து படம் பார்த்தது அந்தக்கால தலைமுறையினருக்கு ஒரு சுகம் என்றால் அழகிய வடிவமைப்புடன் கூடிய பிரமாண்டமான கட்டிடம், சொகுசான இருக்கை, குளிர்சாதன வசதி, மனதை மயக்கும் சவுண்ட் சிஸ்டம் என பல்வேறு நவீன தொழில்நுட்பத்துடன் படம் பார்ப்பது இன்றைய தலைமுறைக்கு சுகமாக உள்ளது.

மாட்டு வண்டியில் விளம்பர தட்டிமூலம் கிராமம் கிராமமாக சென்று திரையிடப்படும் படம் குறித்து விளம்பரம் செய்வது, சினிமா போஸ்டர் அச்சடித்து பட்டி தொட்டியெங்கும் ஒட்டி விளம்பரப்படுத்துவது, படம் தொடங்குவதற்கு முன்பாக திரையரங்க வாசலில் பாடல் ஒலிப்பது, படப்பெட்டி வருவதற்கு பல மணி நேரங்களுக்கு முன்பே தியேட்டர் முன்பு கூடி இதோ பெட்டி வந்து விட்டது அதோ பெட்டி வந்து விட்டது என கண்கள் பூக்க காத்திருந்தது என அமர்க்களமாக இருந்த திரையரங்க வரலாறு நவீன தொழில்நுட்பத்தால் ஆர்ப்பரிப்பு இல்லாமல் அடங்கி போனது.

சுகமான நினைவுகள்

அம்மா அப்பாவின் கையை பிடித்து கூட்டத்தோடு கூட்டமாக வரிசையில் நின்று டிக்கெட் எடுத்து காத்திருந்து படம் பார்த்த அந்த நினைவுகள் என்றும் சுகமான நினைவுகள்தான்.

காதலர்கள், திருமணமான இளம் தம்பதிகள், பள்ளி, கல்லூரி பருவ நண்பர்கள் என ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒன்று கூடி படம் பார்த்ததும் நம் மனதில் இருந்து என்றும் நீங்காது.

100 நாட்கள் ஓடி சாதனை, 150 நாட்கள் ஓடி சாதனை என திரைப்படத்தின் சாதனை வரலாறு சொல்லும் வாசகங்கள் எல்லாம் இப்போதைய தலைமுறைக்கு அதிசயமாகவே தோன்றும்.

இன்றைக்கும் சொந்த ஊர்களுக்கும், அடிக்கடி சென்று வந்த நகரங்களுக்கும் செல்லும் போது அங்கிருந்த தியேட்டர்களும், படங்களும் நீங்கா நினைவுகளாக நெஞ்சில் இருக்கும்.

விரல் நுனியில் தொழில்நுட்பம்

சமீபகாலமாக தியேட்டர் இருந்த இடங்கள் வணிக வளாகங்களாக குடியிருப்புகளாக மாறியிருப்பதை காணும்போது எதையோ ஒன்றை இழந்தது போன்று ஏதோ ஒரு சோகம் நம்மை தொற்றிக்கொள்வதையும் மறுக்க முடியாது.

தமிழக அரசியலை மாற்றிய வெற்றி சரித்திரங்களை எழுதிய பள்ளிக்கூடங்களாக அன்றைய திரையரங்குகள் இருந்தன என்பதும் நிதர்சனமான உண்மை.

விரல் நுனியில் எங்கிருந்தும் நாம் விரும்பும் படத்தை பார்க்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில் மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போன திரையரங்குகளுக்கு இன்னும் அதே மவுசு இருக்கிறதா? திரையரங்குகளை நோக்கிய மக்கள் பயணம் குறைகிறதா? என்பது குறித்து தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள், சினிமா ரசிகர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

அதன் விவரம் வருமாறு:-

சிறந்த திரைப்படங்களை காண

தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் அசோசியேசன் முன்னாள் செயலாளர் எல்.மோகன்ரங்கம் கூறியதாவது:-

பொதுவாக முன்பைவிட தியேட்டர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் 2-க்கும் மேற்பட்ட திரைகளை கொண்ட தியேட்டர்கள் பல உள்ளன. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் 25-க்கும் மேற்பட்ட திரைகளில் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. பல்வேறு தொழில்நுட்பங்கள் மூலம் திரைப்படங்களை காண முடிந்தாலும், பொதுமக்கள் சிறந்த திரைப்படங்களை காண தியேட்டரை நோக்கி தான் வருகின்றனர்.

அதற்கு தியேட்டர்கள் பெரும்பாலும் அதிநவீன வசதிகளுடன் இயக்கப்படுவதே காரணமாக உள்ளது. அப்போதுதான் காட்சிகள் மற்றும் சத்தங்களை துல்லியமாக உணர முடியும். அதை பொதுமக்கள் நன்கு உணர்ந்து உள்ளனர். அதன் காரணமாக தற்போதும் முன்னணி ஹீரோக்கள் மற்றும் முக்கிய திரைப்படங்களுக்கு பொதுமக்களின் வருகை குறையாமல் உள்ளது. சமூக வலைதளங்களில் சட்டவிரோதமாக திரைப்படங்கள் வெளியாவதை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்தினால் தியேட்டருக்கு வருவோரின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும்.

தின்பண்டங்களுக்கு கூடுதல் விலை

சமூக ஆர்வலர் பிரணவ்குமார்:-

முந்தைய காலத்தில் தியேட்டருக்கு சென்று சினிமா பார்ப்பதை மக்களுக்கு மன மகிழ்ச்சியை அள்ளித் தந்தது. அதற்காக புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது, தியேட்டர்களில் நீண்ட வரிசையில் ரசிகர்கள் டிக்கெட்டுக்காக காத்து நிற்பார்கள். தற்போது முக்கிய நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே அதை காண முடியும்.

டிக்கெட் விலை மற்றும் தின்பண்டங்களின் விலை அதற்கு முக்கிய காரணமாக உள்ளது. அதனால் தியேட்டர்களுக்கு செல்வோர் டிக்கெட்டிற்காக செலவிடும் தொகையை விட தின்பண்டங்களுக்கு கூடுதலாக விலை கொடுக்க வேண்டி உள்ளது. எனவே தியேட்டருக்கு பொதுமக்கள் செல்வது குறைந்து வருகிறது. குறிப்பாக தியேட்டர்களில் தின்பண்டங்களுக்கு சராசரி சந்தையை விட கூடுதல் விலை வசூலிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. அதைக் கட்டுப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். டிக்கெட் மட்டும் தின்பண்டங்களை சீரான விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்தால் தியேட்டருக்கு வருவோரின் எண்ணிக்கை கணிசமாக உயரும்.

குறைந்து வருகிறது

அரூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் என்.உமாராணி:-

பொதுமக்கள் மத்தியில் செலவை குறைத்து சேமிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து உள்ளது. அதன் காரணமாக தேவையற்ற செலவுகளை பெரும்பாலானோர் தவிர்த்துவிடுகின்றனர். அதேசமயம் பொழுதுபோக்கு மீது மக்களுக்கு அதிக ஆர்வம் உள்ளது. அதன் காரணமாக தேவைப்படும் நேரங்களில் குறைந்த செலவில் பொழுதுபோக்கு அம்சங்களில் நேரத்தை செலவிடுகின்றனர். பொழுதுபோக்கு அம்சத்தில் ஒரு காலத்தில் தியேட்டருக்கு சென்று திரைப்படம் பார்ப்பது என்பது மிக முக்கியமானதாக இருந்தது. தற்போது உள்ள காலத்தில் ஓ.டி.டி. தளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளிலேயே பெரும்பாலும் புதிய திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. அதனால் தியேட்டருக்கு செல்வதை பொதுமக்கள் சற்று குறைத்து இருப்பதை காண முடிகிறது. மேலும் பெரிய அளவில் திரை கொண்ட தொலைக்காட்சி பெட்டிகளில், வீட்டில் இருந்தவாரே குடும்பத்தினர் அனைவரும் திரைப்படங்களை காண விரும்புகின்றனர். அதனால் தியேட்டருக்கு செல்வோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

குடும்பத்தினருடன் ஆனந்தமாக

திருச்செங்கோட்டை சேர்ந்த இளைஞர் ஹரி:-

தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்கள் மற்றும் ஓ.டி.டி. தளங்கள் என பெரும்பாலான வகையில் திரைப்படங்களை எளிதாக காண முடிகிறது. இருப்பினும் தியேட்டருக்கு சென்று திரைப்படத்தை பார்த்தால் மட்டுமே முழுமையாக திரைப்படத்தின் தாக்கத்தை உணர முடியும். திரைப்படத்தின் வீடியோ காட்சிகள், இசைகள், பாடல்கள் மற்றும் வசனங்களின் துள்ளியத்தை ரசிக்க முடியும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் வீட்டில் அடிக்கடி தொலைக்காட்சிகளில் திரைப்படங்களை பார்த்தாலும், எப்போதாவது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தியேட்டருக்கு சென்று திரைப்படத்தை பார்ப்பது மிக ஆனந்தமாக இருக்கும். மனதிற்கும் சற்று மாறுதல் கிடைக்கும். எனவே தியேட்டருக்கு சென்று திரைப்படங்களை பார்ப்பது சிறந்ததாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்