பூக்கள் விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை
வடகாடு பகுதியில் பூக்களின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலைப்பட்டு வருகின்றனர்.;
பூக்கள் சாகுபடி
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு சுற்றுவட்டார பகுதிகளில் மல்லிகை, முல்லை, கனகாம்பரம், காக்கரட்டான், சென்டி, சம்பங்கி, ரோஜா, பிச்சி, அரளி உள்ளிட்ட பூக்கள் சாகுபடி பணிகளில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
பூக்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் மற்றும் தங்களது குடும்ப உறுப்பினர்கள் உதவியுடன் அதிகாலை வேளையில் இருந்தே பூக்களை கொஞ்சம் கொஞ்சமாக பறித்து அந்த ந்த பகுதிகளில் உள்ள பூ கமிஷன் கடைகளில் எடை கணக்கில் கொடுத்து, அதிலிருந்து கிடைத்த கணிசமான பணத்தை கொண்டு தங்களது சிறு சிறு தேவைகளை நிவர்த்தி செய்து வருகின்றனர்.
விவசாயிகள் கவலை
ஆனால் ஒரு சில முகூர்த்த தினங்கள் தவிர மற்ற நாட்களில் மிகவும் குறைந்த விலைக்கே விற்பனை ஆகி வருவதால், இதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் விவசாய தொழிலாளர் சம்பளம், இடுபொருட்கள் செலவு உள்ளிட்டவற்றிற்கே பற்றாக்குறை ஏற்பட்டு வருவதாகவும் விவசாயிகள் வருத்தப்பட்டு வருகின்றனர். இப்பகுதிகளில் நறுமண தொழிற்சாலை அமைத்து கொடுத்தாலாவது பூக்களின் விலை உயர்வுக்கு வழி வகை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் பூக்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தற்போது பூக்களின் விலை நிலவரம்:- மல்லிகை கிலோ ரூ.120, முல்லை ரூ.150, சம்பங்கி ரூ.60, கனகாம்பரம் ரூ.300, காக்கரட்டான் ரூ.50, ரோஜா ரூ.30, பிச்சி ரூ.30, சென்டி ரூ.20 ரூ.30 ஆகிய விலைகளில் விற்பனை ஆகி வருவதாகவும் விவசாயிகள் வேதனைப்பட்டு வருகின்றனர்.