செங்கல்பட்டு அருகே போலி மருத்துவர் கைது; 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு மருத்துவம் பார்த்தது கண்டுபிடிப்பு
போலி மருத்துவர் சிவா மீது வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வனத்தையன் கடப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.;
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சூணாம்பேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வனத்தையன், கடப்பாக்கம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கடப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர் உரிய மருத்துவ படிப்பு முடிக்காமல் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலி மருத்துவர் சிவா மீது வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வனத்தையன் கடப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் சிவாவை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது. பின்னர் போலீசார் சிவாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.