மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்களின் ஆதார் எண்ணில் போலி நிறுவனங்கள்

குடியாத்தம் பகுதியில் அப்பாவி பீடி தொழிலாளர்களின் ஆதார் கார்டு, பான் கார்டுகளை பயன்படுத்தி போலியான நிறுவனங்கள் செயல்படுவது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Update: 2023-09-28 18:19 GMT

குடியாத்தம்

குடியாத்தம் பகுதியில் அப்பாவி பீடி தொழிலாளர்களின் ஆதார் கார்டு, பான் கார்டுகளை பயன்படுத்தி போலியான நிறுவனங்கள் செயல்படுவது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் உரிமை தொகை திட்டத்தை நிறைவேற்றி செயல்படுத்தி வருகிறார்.

இந்த திட்டத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான பெண்களின் வங்கி கணக்குகளுக்கு ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஏராளமான பெண்களுக்கு இந்த தொகை வங்கிக் கணக்கில் வரவில்லை. தமிழக அரசு அறிவிப்பை தொடர்ந்து 1000 ரூபாய் கிடைக்கப்பெறாதவர்கள் இ-சேவை மையத்தில் அவர்களுடைய விண்ணப்ப மனு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அதில் ஏராளமாேனாருக்கு அவர்களுடைய பெயரில் நிறுவனங்கள் நடைபெறுவதாகவும் அவர்களின் பெயரில் ஜி.எஸ்.டி. எண் தொடங்கப்பட்டு பல லட்ச ரூபாய் வியாபாரம் நடைபெற்றுள்ளதால் அவர்கள் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியற்றவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

போலீசில் புகார்

குடியாத்தம் பகுதியை பொறுத்தவரை காதர்பேட்டை, முத்துக்குமரன்நகர், பலமநேர்ரோடு, சித்தூர்கேட், குறிஞ்சிநகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெரும்பாலான கூலித் தொழிலாளர்கள் இதில் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் வேலூரில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்திற்கு சென்று பார்த்தபோது அவர்கள் பெயரில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், தென்காசி, மதுரை, கோவை, ஓசூர், ராணிப்பேட்டை, பெங்களூரு உள்ளிட்ட பல பகுதிகளில் போலி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

அதில் பல லட்ச ரூபாய் வணிகம் நடைபெற்றதாக கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட 14 பெண்கள் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அது குறித்து குடியாத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

அதன்பேரில் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதியிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர்.

மோசடி

போலீசாரின் விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரிய வந்தது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பேரணாம்பட்டை சேர்ந்த ஒரு நபர் குடியாத்தம் பகுதியில் உள்ள பீடி மற்றும் பல்வேறு கூலி தொழில் செய்பவர்களிடம் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்து தருவதாகவும் ஆம்பூரில் உள்ள ஒருவர் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து உங்களுக்கு தமிழகஅரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற்று தருவார் என ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.

அதனை நம்பி அந்த கூலி தொழிலாளர்கள் விண்ணப்ப படிவம், ஆதார்கார்டு, பான்கார்டு மற்றும் செல்போன் எண்ணை கொடுத்துள்ளனர்.

அதுபோல் ஏராளமானவர்களிடம் பெற்றுச் சென்ற அந்த நபர் ஆம்பூரில் உள்ள அந்த குறிப்பிட்ட நபரிடம் கொடுத்துள்ளார். அந்த நபர் அப்பாவி தொழிலாளர்களின் ஆதார்கார்டு மற்றும் பான்கார்டு ஆகியவைகள் மூலம் மோசடியான நபர்களுக்கு கொடுத்துள்ளார். அந்த நபர்கள் பல்வேறு போலி நிறுவனங்கள் தொடங்கி உள்ளனர்.

இந்த நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. எண் பெறப்பட்டு அதன் மூலம் பல லட்ச ரூபாய்க்கான வியாபாரம் நடைபெற்றதாக ஜி.எஸ்.டி. கட்டி உள்ளனர் இதனால் உண்மையான தொழிலாளர்களுக்கு தமிழக அரசு மூலம் கிடைக்க வேண்டிய மகளிர் உரிமை திட்டத்திற்கான 1000ரூபாய் கிடைக்கப்பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கோரிக்கை

இந்த மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீதும் சம்பந்தப்பட்ட போலி நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்