அ.தி.மு.க.வினரிடையே கோஷ்டி மோதல்; 2 பேர் கைது

விழுப்புரத்தில் அ.தி.மு.க.வினரிடையே கோஷ்டி மோதலில் 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

Update: 2023-04-13 19:00 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள பிடாகம் கீழ்குச்சிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காந்தி மகன் ஜெயகணேஷ் (வயது 42). அ.தி.மு.க.வை சேர்ந்த இவர், கோலியனூர் ஒன்றிய இளைஞரணி தலைவராக உள்ளார். இவருக்கும் விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ரவி மகனான அ.தி.மு.க. நகர மாணவர் அணி துணை செயலாளர் சக்திவேல் (27), இணை செயலாளரான விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்த சந்திரசேகர் மகன் குட்டி என்கிற பிரதீப்ராஜ் (25) தரப்பினருக்கும் கட்சிப்பணி தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் வழுதரெட்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன்பு ஜெயகணேஷ் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சக்திவேல், குட்டி, விழுப்புரம் வண்டிமேட்டை சேர்ந்த உஸ்மான் உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து முன்விரோதம் காரணமாக ஜெயகணேசை திட்டி இரும்புக்கம்பி, பைப் ஆகியவற்றால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் கீழ்உதடு, வலதுகண் உள்ளிட்ட இடங்களில் காயமடைந்த ஜெயகணேஷ், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சக்திவேல் உள்ளிட்ட 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேல், குட்டி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்