வேகமாக நிரம்பும் கண்மாய்கள்
காரியாபட்டி பகுதிகளில் தொடர்மழை பெய்வதால் கண்மாய்கள் வேகமாக நிரம்புகின்றன. ஆதலால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் சாகுபடி பணியை தொடங்கி உள்ளனர்.;
காரியாபட்டி,
காரியாபட்டி பகுதிகளில் தொடர்மழை பெய்வதால் கண்மாய்கள் வேகமாக நிரம்புகின்றன. ஆதலால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் சாகுபடி பணியை தொடங்கி உள்ளனர்.
தொடர்மழை
காரியாபட்டி, நரிக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
ஆடிமாதத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் காரியாபட்டி பகுதியை சேர்ந்த பாம்பாட்டி, வையம்பட்டி பாஞ்சார், பிசிண்டி மற்றும் அல்லாளப்பேரி, வல்லப்பன்பட்டி, முடுக்கன்குளம், சொக்கனேந்தல், மறைக்குளம் உள்பட பல்வேறு கிராமங்களில் நிலக்கடலை, பருத்தி, எள், பயறு ஆகியவற்றை விவசாயிகள் விதைத்து வருகின்றனர். காரியாபட்டி பகுதியில் தொடர்மழையின் காரணமாக கண்மாய்களுக்கு நீர்வரத்து வர தொடங்கியுள்ளது.
தொடர்மழையினால் காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் உள்ள தெருக்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
தடுப்பணை
கண்மாய்களில் ஓரளவுக்கு தண்ணீர் வந்துள்ளது. பந்தனேந்தல், கல்குறிச்சி, திருச்சுழி, தமிழ்பாடி உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பந்தனேந்தல் கண்மாய் அருகே ரூ. 11 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டது. தற்போது பெய்த மழைக்கு தடுப்பணையில் தண்ணீர் நிரம்பியது.
பந்தனேந்தல் கண்மாய் நிரம்பி மறுகால் வழியாக திருச்சுழி கண்மாய்க்கு சென்று கொண்டிருக்கிறது. ஆனால் பந்தனேந்தல் கால்வாய் முழுவதும் சீமைக்கருவேல் மரங்கள் வளர்ந்து இருப்பதால் திருச்சுழி கண்மாய்க்கு தண்ணீர் செல்வதற்கு சிரமமாக உள்ளது. எனவே பந்தனேந்தல் கண்மாய் மறுகாலில் இருந்து திருச்சுழி வரை செல்லும் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகள் மகிழ்ச்சி
அதேபோல் திருமங்கலம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் சென்னம்பட்டி கால்வாயில் தண்ணீர் வரத்தொடங்கியதில் இலுப்பைகுளம் கண்மாய் நிரம்பி காரியாபட்டியின் நீர் ஆதாரமாக உள்ள கரிசல்குளம் கண்மாய்க்கும் மேலும் சென்னம்பட்டிகால்வாய்மூலம் கழுவனச்சேரி கண்மாய்க்கும் தண்ணீர் சென்று கண்மாய் நீர்வரத்து உயர்ந்துள்ளது.
காரியாபட்டி, நரிக்குடி பகுதியில் மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.