முல்லைப்பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு: லோயர்கேம்பில் மின் உற்பத்தி அதிகரிப்பு
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டதால் லோயர்கேம்பில் மின்உற்பத்தி அதிகரித்துள்ளது;
கூடலூர் அருகே லோயர்கேம்பில் மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 4 ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒரு ஜெனரேட்டர் மூலம் 35 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இதற்கு வினாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும்.
இதற்கிடையே நேற்று வரை அணையில் இருந்து வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் 2 ஜெனரேட்டர்கள் மூலம் வினாடிக்கு 72 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதையொட்டி அணையில் இருந்து கூடுதலாக வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்று காலை முதல் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் மூலம் வினாடிக்கு 90 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கிடையே முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 340 கன அடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு 1000 கன அடியாகவும் இருந்தது.