குப்பை கிடங்கில் எரிந்து வந்த தீ அணைப்பு
கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் 6 நாட்களாக எரிந்து வந்த தீ முழுமையாக அணைக்கப்பட்டது;
கரூர் வாங்கல் சாலையில் அரசு காலனி அருகே கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பைக்கிடங்கில் கடந்த 31-ந்தேதி மாலை 5.30 மணி அளவில் திடீரென தீப்பற்றி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனையடுத்து கரூர், புகழூர், அரவக்குறிச்சி, முசிறி தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடந்த 5 நாட்களாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் தீ ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது. ஆனாலும் முழுவதுமாக தீயை அணைக்க முடியவில்லை. இந்நிலையில் தொடர்ந்து 6-வது நாளாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட வீரர்கள், நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்து, அதனை முழுவதுமாக அணைத்தனர். இதனால் கரூர் வாங்கல் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.