மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைக்க 28-ந்தேதி வரை காலநீட்டிப்புஇதுவே இறுதி வாய்ப்பு என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்;

Update: 2023-02-15 20:13 GMT

மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைக்க வருகிற 28-ந்தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவே இறுதி வாய்ப்பு என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்

இறுதி வாய்ப்பு

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து, ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பொய்க்கால் குதிரை ஆட்டத்துடன் சென்று கை சின்னத்துக்கு வாக்குகளை திரட்டினார்.

முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

தமிழகத்தில் 2 கோடியே 60 லட்சம் மின் நுகர்வோர் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைத்துள்ளனர். இன்னும் 7 லட்சம் மின் இணைப்புகள் ஆதார் எண் இணைக்கப்படாமல் உள்ளது. இந்த மின் நுகர்வோரை கவனத்தில்கொண்டு ஆதார் எண் இணைக்க வருகிற 28-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதுவே இறுதி கால நீட்டிப்பு ஆகும். இனிமேல் கால நீட்டிப்பு அளிக்கப்படமாட்டாது.

88 மதுக்கடைகள் அகற்றம்

2021-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் மதுக்கடைகளை குறைப்போம் என தெரிவிக்கவில்லை. இந்த ஆட்சியில் இதுவரை 88 மதுக்கடைகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவிக்கும் பகுதிகளில் உள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தோல்வி அச்சத்தால் அ.தி.மு.க.வினர் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்து வருகின்றனர்.

தங்களை அடைத்து வைத்துள்ளதாக வாக்காளர் யாராவது தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளாரா? தி.மு.க. கூட்டணி தேர்தல் அலுவலகங்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்றுத்தான் அமைக்கப்பட்டுள்ளது.

இலவச மின்சாரம்

கைத்தறி, விசைத்தறிக்கான இலவச மின்சார பயன்பாட்டு அளவை உயர்த்தி உள்ளதற்கான அரசாணையை வெளியிட தேர்தல் ஆணையத்திடம் அரசு சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. இந்த அரசாணையை வெளியிட அனுமதிக்ககூடாது என தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அளித்துள்ளது. அதன்பிறகு அரசு சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு விளக்க கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. தேர்தல் ஆணையத்திடம் இருந்து ஒப்புதல் கிடைக்கவில்லையெனில் தேர்தல் நடைமுறைகள் முடிந்தபிறகு அரசாணை வெளியிடப்படும். 5 ஆண்டுகாலம் ஆட்சி செய்யவே மக்கள் வாக்களித்து தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்தி உள்ளனர். 1½ ஆண்டு காலத்தில் 85 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சிய வாக்குறுதிகளையும் முதல்-அமைச்சர் விரைவில் நிறைவேற்றுவார். தமிழக அரசு சுமார் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மக்களுக்கு மின்சார மானியம் வழங்குகிறது. 2 கோடியே 37 லட்சம் மின் இணைப்புகளில் 1 கோடி இணைப்புகளுக்கு மின் கட்டணம் முழுமையாக இல்லை. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 84 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இப்போது 31 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்