நீலகிரியில் மகளிருக்கான இலவச பேருந்து பயணத்திட்டம் விரிவாக்கம் - இன்று முதல் 99 பேருந்துகள் இயக்கம்
நீலகிரியில் இன்று முதல் 99 பேருந்துகள் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகளாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.;
நீலகிரி,
மலை மாவட்டமான நீலகிரியில் இன்று முதல் மகளிர் விடியல் பயணத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் மகளிருக்கான விடியல் பயணத்திட்டம் விரிவாக்கம் மற்றும் புதிய பேருந்துகள் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் சிவசங்கர், அமைச்சர் கா.ராமச்சந்திரன், தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, மாவட்ட கலெக்டர் அருணா ஆகியோர் கலந்து கொண்டு திட்டத்தை விரிவாக்கம் செய்து வைத்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், "மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்தை வழங்கிடும் 'விடியல் பயணம் திட்டம்' இதுவரை மலைப் பகுதிகளில் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் இந்த திட்டம் மலைப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதன்படி 'மகளிர் விடியல் பயணம் திட்டம்' இன்று உதகையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலத்தில் மொத்தம் உள்ள 160 பேருந்துகளில், 99 பேருந்துகள் இன்று முதல் கட்டணமில்லா பேருந்துகளாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டம் படிப்படியாக அனைத்து மலைப் பகுதிகளிலும் விரிவாக்கம் செய்யப்படும்."
இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.