கலெக்டரை கீழே தள்ளியவருக்கு காவல் நீட்டிப்பு
கலெக்டரை கீழே தள்ளியவருக்கு காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது.;
ராமநாதபுரத்தில் கடந்த மாதம் 16-ந்தேதி நடந்த அரசு விழா ஒன்றில் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும், நவாஸ் கனி எம்.பி.க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த தகராறின்போது பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி தகராறினை விலக்கி விட முயன்றபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் கீழே தள்ளி விடப்பட்டார். நவாஸ்கனி எம்.பி.யின் உதவியாளர் விஜயராமு என்பவர் தள்ளவிட்டது வீடியோ காட்சி மூலம் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து எம்.பி.யின் ஆதரவாளர் விஜயராமுவை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் ராமநாதபுரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்காக விஜயராமு ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்.2ல் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி வரும் 28-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.