நெல்லையில் இருந்து ஈரோடு, மயிலாடுதுறைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள்
மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட நெல்லையில் இருந்து மயிலாடுதுறை, ஈரோட்டுக்கு மீண்டும் வருகிற 11-ந் தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.;
மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட நெல்லையில் இருந்து மயிலாடுதுறை, ஈரோட்டுக்கு மீண்டும் வருகிற 11-ந் தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
ரெயில்வே விதி
மதுரை ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து ஈரோடு மற்றும் மயிலாடுதுறைக்கு பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் கட்டுப்பாடு என்ற பெயரில் இந்த ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர், 200 கி.மீ. தூரத்துக்கு மேல் இயக்கப்படும் பாசஞ்சர் ரெயில்கள் எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் இயக்கப்படும் என ரெயில்வே கொள்கை வெளியிடப்பட்டது. அதன்படி, இந்த ரெயிலை எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயிலாக இயக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், ரெயில்வே வாரிய புதிய விதிகளின் படி, இணைப்பு ரெயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நெல்லை-ஈரோடு, மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயிலின் முன்பகுதி பெட்டிகள் ஈரோடு ரெயில் நிலையத்துக்கும், பின்பகுதி பெட்டிகள் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் என்ஜின் பொருத்தப்பட்டு மயிலாடுதுறைக்கும் இயக்கப்பட்டு வந்தன. இதனால், இந்த ரெயிலை நெல்லையில் இருந்து இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. தென்னக ரெயில்வேக்கு உள்பட்ட கேரள மாநிலத்தில், ரெயில்வே வாரிய விதிகளின் படி, இணைப்பு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டாலும், அதற்கு பதிலாக தனி ரெயிலாக இயக்கப்படுகின்றன. ஆனால், தமிழகத்தில் மட்டும் ரெயில்வே விதிகள் அனைத்தும் பின்பற்றப்படுவதாக கூறி பயணிகள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஈரோடு, மயிலாடுதுறை
இந்த நிலையில், திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து மயிலாடுதுறைக்கும், நெல்லையில் இருந்து ஈரோடு ரெயில் நிலையத்துக்கும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரெயில்கள் வருகிற 11-ந் தேதி முதல் இயக்கப்படவுள்ளன. அதன்படி, இந்த ரெயில் (வ.எண்.16847) மயிலாடுதுறையில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்பட்டு மாலை 4 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையம் வந்தடையும். மறுமார்க்கத்தில் வருகிற 12-ந் தேதி முதல் இந்த ரெயில் (வ.எண்.16848) திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு மாலை 4 மணிக்கு மயிலாடுதுறை ரெயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரெயில்கள், குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர், மஞ்சத்திடல், திருச்சி, மணப்பாறை, வையம்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
அதேபோல, ஈரோடு-நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16845) வருகிற 11-ந் தேதியில் இருந்து ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 1.35 மணிக்கு புறப்பட்டு மாலை 4.27 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையம் வருகிறது. மாலை 5.45 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. இரவு 9.45 மணிக்கு நெல்லை ரெயில் நிலையம் சென்றடையும். மறுமார்க்கத்தில் வருகிற 13-ந் தேதி முதல் இந்த ரெயில் (வ.எண்.16846) நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 6.15 மணிக்கு புறப்பட்டு காலை 9.30 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. காலை 11.12 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையம் செல்கிறது. மதியம் 2.30 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையம் சென்றடையும்.
இந்த ரெயில்கள் கொடுமுடி, புகலூர், கரூர், வெள்ளியணை, எரியோடு, திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், துலுக்கப்பட்டி, சாத்தூர், கோவில்பட்டி, கடம்பூர், வாஞ்சி மணியாச்சி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயில்களில் 10 இரண்டாம் வகுப்பு பொதுபெட்டிகளும், 2 பார்சல் வேனுடன் இணைந்த பொதுப்பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரெயிலை திண்டுக்கல்-மயிலாடுதுறை ரெயிலுக்கு இரு மார்க்கங்களிலும் இணைப்பு ரெயிலாக பயன்படுத்தி கொள்ளலாம்.
இணைப்பு ரெயில்
கொரோனாவுக்கு முன்னதாக நெல்லையில் இருந்து இந்த ரெயில் (வ.எண்.56822/56826) அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு காலை 9.20 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடையும். காலை 11 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையம் சென்றடையும். அங்கிருந்து ஈரோடு செல்லும் ரெயில் காலை 11.20 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.40 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையம் சென்றடைந்தது. மயிலாடுதுறை செல்லும் ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 11.10 மணிக்கு புறப்பட்டு மாலை 5.15 மணிக்கு மயிலாடுதுறை சென்றடைந்தது.
மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.56821) மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையம் வந்தடையும். மற்றொரு ரெயில் (வ.எண்.56825) ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு மாலை 4.25 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையம் வந்தடையும்.
இந்த ரெயில்களின் பெட்டிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு திண்டுக்கல்லில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தன. இரவு 11.30 மணிக்கு நெல்லை ரெயில் நிலையம் சென்றடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.