காரைக்குடிக்கு தினசரி இரவு நேர விரைவு ரெயில்கள் இயக்க வேண்டும்

சென்னையில் இருந்து மயிலாடுதுறை பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடிக்கு தினசரி இரவு நேர விரைவு ரெயில்கள் இயக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.;

Update: 2023-07-03 21:12 GMT

பட்டுக்கோட்டை;

சென்னையில் இருந்து மயிலாடுதுறை பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடிக்கு தினசரி இரவு நேர விரைவு ரெயில்கள் இயக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நல சங்க தலைவர் ஜெயராமன், செயலாளர் விவேகானந்தம் ஆகியோர் புதுடெல்லி ரெயில்வே வாரிய தலைவருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

4 ரெயில்கள்

மயிலாடுதுறை -திருவாரூர்- பட்டுக்கோட்டை -காரைக்குடி ரெயில் பாதையில் தற்போது தாம்பரம்-செங்கோட்டை அதி விரைவு ரெயில் வாரம் மூன்று முறையும், செகந்திராபாத்- ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு விரைவு ரெயில், எர்ணாகுளம்- வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு விரைவு ரெயில், திருவாரூர்-காரைக்குடி சிறப்பு விரைவு ரெயில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரையும் என 4 ரெயில்கள் இயங்கி வருகின்றன.

மேலும் இந்த தடத்தில் சென்னை மற்றும் மதுரைக்கான தினசரி ரெயில்களை இயக்க வேண்டும். " மயிலாடுதுறை-திருவாரூர்- பட்டுக்கோட்டை-காரைக்குடி ரெயில் பாதையில் முன்பு மீட்டர் கேஜ் காலத்தில் சென்னையில் இருந்து இயங்கி வந்த கம்பன் விரைவு ரெயிலை மீண்டும் இத்தடத்தில் சென்னையில் இருந்து காரைக்குடி அல்லது ராமேஸ்வரம் வரை தினசரி இரவு நேரத்தில் இரு முனைகளில் இருந்தும் இயக்க வேண்டும்.

மின்மயமாக்க வேண்டும்

மேலும் ரெயில்வே நிர்வாகம் இயக்க திட்டமிட்டுள்ள சென்னை- திருச்சி சோழன் பகல் நேர அதி விரைவு ரெயிலுக்கு இணைப்பு ரெயிலைகாரைக்குடியில் இருந்து மயிலாடுதுறை வரை இயக்க வேண்டும். மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர்- பட்டுக்கோட்டை- காரைக்குடி- மானாமதுரை வழியாக மதுரைக்கு தினசரி ரெயிலை இயக்க வேண்டும்.ரெயில்வே நிர்வாகம் வாரம் இருமுறை இயக்க திட்டமிடப்பட்டுள்ள எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு விரைவு ரெயிலை நிரந்தரமாக வாரம் இருமுறை சாதாரண கட்டணத்தில் இயக்க வேண்டும். செகந்திராபாத்- ராமேஸ்வரம் சிறப்பு கட்டண வாராந்திர விரைவு ரெயிலை சாதாரண கட்டணத்தில் நிரந்தரமாக இயக்க வேண்டும். திருவாரூர்-காரைக்குடி, திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி ரெயில் தடங்களை மின் மயமாக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்