திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே நாட்டு வெடி வெடித்ததால் பரபரப்பு - போலீசார் விசாரணை

திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே திடீரென நாட்டு வெடி வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2023-04-01 13:33 IST

திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே ரெயில்வே மேம்பாலம் உள்ளது. அங்கு பல வருடங்களாக நாடோடி பழங்குடியினர்களான நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணி அளவில் திடீரென வெடி வெடித்தது போல் பலத்த சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த வழியே சென்றவர்கள் அலறியடித்து ஓடினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில் அப்பகுதியில் நாட்டு வெடி வெடித்ததால் சத்தம் கேட்டது தெரியவந்தது.

பின்னர், அப்பகுதியில் வேறு வெடிக்காத வெடி ஏதேனும் உள்ளதா? என போலீசார் சோதனையிட்டனர். ஆனால் வெடி எதுவும் சிக்கவில்லை. நாட்டு வெடி வெடித்த இடத்தில் நரிக்குறவர்கள் ஏராளமானோர் வசித்து வருவதால் அவர்கள் விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த நாட்டு வெடி தவறுதலாக வெடித்ததா? அல்லது வேறு எதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நாட்டு வெடி வெடித்த சம்பவம் திருவள்ளூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்