திருவக்கரை பகுதியில் தொடர்ந்து சுரண்டப்படும் கல்மரங்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருவக்கரை பகுதியில் தொடர்ந்து கல்மரங்கள் சுரண்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2022-12-13 18:45 GMT


விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா திருவக்கரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கல்மரங்கள் காணப்படுகின்றன. பாசில்வுட் எனப்படும் இந்த தொல்லுயிர் எச்சங்கள் 2 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டவை ஆகும். 1781-ல் ஐரோப்பிய விஞ்ஞானி சோனராட் என்பவரால் கண்டறியப்பட்டவை.

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் திருவக்கரை பகுதியில் மட்டுமே இப்படியான கல்மரங்கள் காண கிடைக்கின்றன. அறிவியல் அதிசயம் என உலகம் முழுவதும் உள்ள அறிவியலாளர்களால் திருவக்கரை கல்மரங்கள் கொண்டாடப்படுவது விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமைக்கு உரியதாகும்.

கலெக்டருக்கு மனு

இத்தகைய வரலாற்று சிறப்புவாய்ந்த கல்மரங்களை பாதுகாக்க திருவக்கரையில் மத்திய அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்பில் தேசிய கல்மரப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் திருவக்கரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படும் கல்மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஆனால் இங்குள்ள பகுதியில் கல்மரங்கள் தொடர்ந்து சுரண்டப்பட்டு வருகிறது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட வரலாறு பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் தலைமையிலான குழுவினர், மாவட்ட கலெக்டர் மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் ஆகியோருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சுரண்டப்படும் வளங்கள்

திருவக்கரை பகுதியில் உள்ள செம்மண் குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனும் கோரிக்கைகளை கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் பார்வைக்கு கொண்டு வந்தோம். இதனைத்தொடர்ந்து அப்போதைய கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், உடனடியாக திருவக்கரை பகுதியில் களஆய்வு செய்தார்.

இதுதொடர்பாக அவரது அறிக்கையின் மீதான தொடர் நடவடிக்கையாகவே திருவக்கரையில் தற்போது மாநில அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்பில் புவியியல் பூங்கா கட்டுமானப்பணிகள் நடந்து வருகின்றன. இது வரவேற்புக்குரியது.

ஆனாலும் திருவக்கரையை சுற்றியுள்ள கடகம்பட்டு, தொள்ளாமூர், கொண்டலாங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் செம்மண் குவாரிகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. அவற்றின் மூலமாக செம்மண் மட்டுமல்லாது கல்மரங்கள் எனப்படும் கனிமவளமும் தொடர்ந்து சுரண்டப்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது.

இவை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தற்போது மேற்பரப்பிலேயே காணப்படும் கல்மரங்களை சேகரித்து புதிதாக அமைக்கப்பட்டு வரும் புவியியல் பூங்கா வளாகத்தில் வைக்கலாம்.

நடவடிக்கை தேவை

மேலும் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் அல்லது வானூர் தாலுகாவில் உள்ள பள்ளி- கல்லூரி வளாகங்களில் கல்மரங்களை காட்சிப்படுத்தி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். இப்பகுதியில் இயங்கி வரும் செம்மண் குவாரிகளுக்கும் தடை விதிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், புவியியல் மற்றும் சுரங்கத்துறையும் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்