போலீசில் புகார் அளிப்பது குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விளக்கம்

போலீசில் புகார் அளிப்பது குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விளக்கம்

Update: 2022-11-19 19:56 GMT

குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு தினத்தையொட்டி போலீசில் புகார் அளிப்பது தொடர்பாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா கலந்து கொண்டார்.

வன்கொடுமை தடுப்பு தினம்

குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் போலீஸ் நிலையங்களில் பள்ளி குழந்தைகளுக்கு போலீஸ் நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என டி.ஜி.பி. ைசலேந்திரபாபு உத்தரவிட்டார்.

இதையடுத்து தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு போலீஸ் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

போலீஸ் நிலையத்தில் எவ்வாறு புகார் அளிப்பது, புகார்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது. ஆண், பெண் குழந்தைகளுக்கு எவ்வாறு அநீதி இழைக்கப்படுகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு

இந்த நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா கலந்து கொண்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

போலீஸ் நிலையத்துக்கு வருவதற்கு குழந்தைகள் யாரும் அச்சப்படக் கூடாது. குழந்தைகளுக்கு பிரச்சினை ஏற்படும்போது, அவர்களுக்கு உதவி செய்வதற்குத்தான் போலீசார் உள்ளனர். குழந்தைகளிடம் யாராவது தவறாக நடந்து கொள்ள முயன்றாலோ, தொந்தரவு செய்தாலோ போலீசாரிடம் அச்சமின்றி புகார் செய்யலாம்.

போலீசாரை அணுகலாம்

குழந்தைகளின் வாழ்க்கை பயணத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் போலீசாரை அணுகலாம். குழந்தைகளுக்கு போலீசார் நண்பர்களாக இருந்து உதவி செய்து, ஆதரவும் கொடுப்பர். மேலும், எந்தச் சந்தேகம் இருந்தாலும் போலீசாரை அணுகி தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.குழந்தைகளில் பலர் எதிர்காலத்தில் போலீசாக வேண்டும் என்ற லட்சியத்தில் இருப்பர். அவர்களும் போலீசில் சேருவதற்கு என்னென்ன தகுதிகளை வளர்த்துக் கொள்வது போன்ற சந்தேகங்களையும் எங்களை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்