அடக்கம் செய்யப்பட்ட உடல் தோண்டி எடுப்பு

குன்னூர் அருகே இறந்தவர் உயிரோடு வந்ததாக பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அடக்கம் செய்யப்பட்ட உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அதன் பாகங்கள் டி.என்.ஏ. பரிசோதனைக்கு பாகங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2023-04-06 18:45 GMT

குன்னூர்

குன்னூர் அருகே இறந்தவர் உயிரோடு வந்ததாக பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அடக்கம் செய்யப்பட்ட உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அதன் பாகங்கள் டி.என்.ஏ. பரிசோதனைக்கு பாகங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

தூக்குப்போட்டு தற்கொலை

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள எடப்பள்ளி ஆரக்கோம்பை பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான அடர்ந்த காடு உள்ளது. இந்த காட்டில் கடந்த மாதம் 14-ந் தேதி வனத்துறையின் சிறப்பு ரோந்து பிரிவினர் வழக்கமான பணியை மேற்கொண்டு இருந்தனர்.

அப்போது அங்குள்ள ஒரு மரத்தில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கினார். உடல் அழுகி இருந்ததால், அவரை அடையாளம் காணும் பணி சவாலாக இருந்தது. மேலும் அவர் தற்கொலை செய்து ஒரு மாதத்துக்கு மேல் இருக்கலாம் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வண்டிசோலை வனவர் முருகன், வெலிங்டன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகவேல் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

உடல் யாருடையது?

அவர் அணிந்திருந்த சட்ைடயை வைத்து விசாரித்தபோது, தற்கொலை செய்தது குன்னூர் ஓட்டுப்பட்டறை முத்தாலம்மன் பேட்டையை சேர்ந்த எம்.ஜி.ஆர். என்ற ராஜேந்திரன்(வயது 60) என்று கூறப்பட்டது. தொடர்ந்து அந்த உடல் பிரேத பரிசோதனை செய்து, ராஜேந்திரனின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் உடலை வண்ணாரபேட்டையில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்தனர்.

இதற்கிடையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட ராேஜந்திரன் நேற்று முன்தினம் குன்னூர் பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், நாம் புதைத்தது யாருைடய உடலை என்பது தெரியாமல் குழம்பினர்.

தோண்டி எடுத்து விசாரணை

இதை அறிந்த வெலிங்டன் போலீசார், தீவிர விசாரணையை தொடங்கினர். மேலும் குன்னூர் தாசில்தாரும், வட்ட நிர்வாக நடுவருமான சிவக்குமாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று வண்ணாரபேட்டை மயானத்தில் புதைக்கப்பட்டவரின் உடல் தாசில்தாரும், வட்ட நிர்வாக நடுவருமான சிவக்குமார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. உடலின் பாகங்கள் எடுக்கப்பட்டு டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதன்பின்னரே அவர் யார் என்ற விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்