உயர்தர உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்தும் கண்காட்சி

திருப்பதிசாரத்தில் உயர்தர உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சியை கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்தார்.

Update: 2023-01-13 18:45 GMT

நாகர்கோவில், 

திருப்பதிசாரத்தில் உயர்தர உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சியை கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்தார்.

கருத்தரங்கு

குமரி மாவட்ட வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் வேளாண் அறிவியல் மையம் இணைந்து திருப்பதிசாரம் வேளாண் அறிவியல் நிலைய வளாகத்தில் உயர்தர உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நேற்று நடந்தது. இந்த கண்காட்சியை கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது கூறியதாவது:-

சிறந்த ரகங்களை உருவாக்க...

பல்வேறு பயிர்களில் விரும்பத்தக்க குணங்களையுடைய பாரம்பரியமிக்க பல்வேறு உள்ளூர் ரகங்களை கண்டறிந்து ரக மேம்பாட்டுக்கான ஆய்வுகளில் பயன்படுத்தினால் பகுதிக்கேற்ற சிறந்த ரகங்களை உருவாக்க முடியும். குமரி மாவட்டத்தில் பல்வேறு ரக வாழை இனங்கள் கண்டறியப்பட்டு, வாழை இனங்கள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவைகளில் பல்வேறு ரகங்களை விரிவுப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த கண்காட்சியில் விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்டுள்ள உள்ளூர் பயிர் ரகங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களால் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள், வேளாண் துறையின் மூலம் வேளாண் எந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்துரையாடல்

கண்காட்சியில் திருப்பதிசாரம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகளான சுரேஷ், லதா, கவிதா, செல்வராணி ஆகியோர் விவசாயிகளுடன் கலந்துரையாடினர்.

இதைத் தொடர்ந்து வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் அங்கக வேளாண்மை வழிகாட்டி கையேட்டினை கலெக்டர் அரவிந்த் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ், வேளாண்மை இணை இயக்குனர் ஹனிஜாய் சுஜாதா, திருப்பதிசாரம் வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைவர் சொர்ணபிரியா, வேளாண்மை துணை இயக்குனர் ஆல்பர்ட் ராபின்சன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கீதா, தோட்டக்கலை துணை இயக்குனர் ஷீலா ஜாண், வேளாண்மை துணை இயக்குனர் ஊமைத்துரை, வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) சுந்தர் டேனியல் பாலஸ், வேளாண்மை உதவி இயக்குனர் (தோவாளை) சுரேஷ், விதைச்சான்று உதவி இயக்குனர் ஷீபா, உதவி செயற்பொறியாளர் வர்கீஸ், வேளாண்மை அலுவலர் (உழவர் பயிற்சி நிலையம்) பொன்ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்