தீக்குளிக்க பெட்ரோலுடன் வந்த குடும்பத்தினரால் பரபரப்பு

தீக்குளிக்க பெட்ரோலுடன் வந்த குடும்பத்தினரால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2022-06-13 19:45 GMT

பெரம்பலூர்:

போலீசார் சோதனை

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வந்தது. இதனை தடுக்க நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்த பொதுமக்களையும், அவர்களது உடைமைகளையும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சோதனையிட்ட பிறகே உள்ளே அனுமதித்தனர்.

அப்போது அங்கு வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் சோதனையிட்டனர். இதில், அவர்கள் தீக்குளிக்க 2 பாட்டில்களில் பெட்ரோல் கொண்டு வந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து பெட்ரோலை கைப்பற்றிய போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

ஓடை பாதை ஆக்கிரமிப்பு

விசாரணையில் அவர்கள் ஆலத்தூர் தாலுகா, நக்கசேலம் கவுண்டர் தெருவை சேர்ந்த பழனிசாமி (வயது 57), அவரது மனைவி சசிகலா (43), அவர்களுடைய மூத்த மகன் திருமுருகன் (25), மாற்றுத்திறனாளியான இளைய மகன் தினேஷ் (22) என்பது தெரியவந்தது. மேலும் பழனிசாமி விவசாய விளை நிலத்திற்கு செல்லும் வழித்தடமான ஓடையை உறவினர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாக தெரிகிறது. இதனால் பழனிசாமியால் விவசாயம் செய்ய முடியவில்லை என்றும், இது தொடர்பாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் பழனிசாமி குடும்பத்தினர் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, தங்களுடைய விவசாய நிலத்திற்கு செல்வதற்கு ஓடையில் ஆக்கிரமிப்பை அகற்றி பாதை ஏற்படுத்தி தர வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்துக்கு பெட்ரோலுடன் வந்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அந்த குடும்பத்தினர் இது தொடர்பாக கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் மனு கொடுத்துவிட்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்