கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற விவசாயியால் பரபரப்பு...!
தர்மபுரி அருகே கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.;
தர்மபுரி மாவட்டம் மகேந்திர மங்கலம் அருகே கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி சத்யராஜ் என்பவரின் கிணற்றை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்காக அதிகாரிகள் மூட வந்தனர். அப்போது உரிய இழப்பீடு தராமல் கிணற்றை மூட சத்யராஜ் எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும் கடந்த 20 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் நிலத்தடி நீர் மட்டம் 1500 அடிக்கும் கீழே சென்று விட்டதால், கிணற்றை ஆழப்படுத்தியும், ஆழ்துளை கிணறு அமைத்தும் விவசாயம் செய்து பிழைத்து வருகிறோம். எனவே கிணற்றுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரினார்.
இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது. இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் எந்திரம் மூலம் கிணற்றை மூட முயன்று உள்ளார். இதனால் ஆவேசமடைந்த சத்தியராஜ் தீடீரென கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதனை அறிந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
தகவலறிந்த பாலக்கோடு போலீஸ் டி.எஸ்.பி.தினகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாயி சத்யராஜூடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய இழப்பீடு பெற்று தருவதாக உறுதியளித்தார். பின்னர், சமாதனமடைந்த சத்யராஜ் கிணற்றில் இருந்து மேலே ஏறி வந்தார்.
விவசாயி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.