மாணவனை தாக்கிய தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை கோரி மத்தூர்பதி அரசு பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோரால் பரபரப்பு
மத்தூர்பதி அரசு தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு மாணவனை தாக்கிய தலைமை ஆசிரியரை கண்டித்து பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்தூர்:
மத்தூர்பதி அரசு தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு மாணவனை தாக்கிய தலைமை ஆசிரியரை கண்டித்து பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3-ம் வகுப்பு மாணவன்
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் மத்தூர்பதி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 32 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியையாக உமா மகேஸ்வரி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த பள்ளிக்கூடத்தில் மத்தூர் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த மார்க்கண்டேயன் மகன் ஜனா (வயது 8) 3-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவன் ஜனா வீட்டுப்பாடங்களை எழுதி வரவில்லை எனக்கூறி தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி பிரம்பால் மாணவனை அடித்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவனுக்கு உடலில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து மாணவன் வீட்டுக்கு சென்றதும் காயம் இருந்ததை அறிந்த தாய் ராஜேஸ்வரி மற்றும் உறவினர்கள் அவனை மத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.
முற்றுகை
இதற்கிடையே ஜனாவை தலைமை ஆசிரியர் தாக்கியதை பார்த்து பயந்துபோன பிற மாணவர்கள் பல்வேறு காரணங்களை கூறி நேற்று பள்ளிக்கூடத்துக்கு செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவர்களிடம் கேட்டபோது பள்ளியின் தலைமை ஆசிரியை அடிக்கடி அடிப்பதால் பள்ளிக்கு செல்ல பயமாக உள்ளது என்றும், வேறு பள்ளியில் தங்களை சேர்த்து விடுமாறும் கூறினார்களாம்.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், பொதுமக்கள் நேற்று காலை பள்ளிக்கூடத்தில் திரண்டு முற்றுகை போராட்டத்தை நடத்தினர். பின்னர் அங்கிருந்த தலைமை ஆசிரியையுடன் சுமார் 1 மணி நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஊராட்சி தலைவர் மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் தலைமை ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று கூறிவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பள்ளிக்கூடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.