மக்கள் குறைதீர்க்கும் நாளில்வீட்டுமனை பட்டா கேட்டு மனுபாதுகாப்பு தருமாறு கிராம மக்கள் முறையிட்டதால் பரபரப்பு
தர்மபுரி:
மக்கள் குறைதீர்க்கும் நாளில் வீட்டு மனைப்பட்டா கேட்டு மனு கொடுக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பு தருமாறு கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் முறையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வீட்டுமனை பட்டா
தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். கூட்டத்தில் கக்கன்ஜிபுரத்தைச் சேர்ந்த மக்கள் திரண்டு வந்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் இந்த பகுதியில் 25-க்கும் மேற்பட்ட ஏழை தொழிலாளர் குடும்பங்கள் வசித்து வருகிறோம். ஒவ்வொரு வீட்டிலும் கூட்டு குடும்பமாக வசிப்பதால் இட நெருக்கடி ஏற்பட்டு சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக நிலம் கிடையாது. எனவே எங்கள் பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மிரட்டல்
தர்மபுரி மாவட்டம் நாகனம்பட்டி ஊராட்சி சங்கனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவில் மாடு பிடிக்கும் நிகழ்ச்சியில் எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மாடுபிடிக்க கூடாது என்று சிலர் தடுத்து தகராறு செய்து 3 பேரை தாக்கினார்கள். இது பற்றி கேட்ட எங்களை சிலர் தரக்குறைவாக பேசி இந்த ஊரில் வசிக்க முடியாத நிலை ஏற்படும் என எங்களுக்கு மிரட்டல் விடுகிறார்கள். இதனால் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த சில குடும்பங்கள் ஊரில் உள்ள வீட்டை விட்டு வெளியேறி வெளியூர்களில் தஞ்சம் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்தி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் அச்சமின்றி அந்த கிராமத்தில் தொடர்ந்து வசிக்க தேவையான சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. பாதுகாப்பு வேண்டும் என கிராம மக்கள் மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிறப்பு தணிக்கை
பழைய தர்மபுரி பகுதியைச் சேர்ந்த பெண்கள் திரண்டு வந்து கொடுத்த கோரிக்கை மனுவில், இந்த பகுதியில் 10-க்கும் மேற்பட்ட ஏழை குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக நிலமோ, வீட்டுமனையோ இல்லை. எனவே எங்கள் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பத்ர அள்ளிஊராட்சி மன்ற துணைத் தலைவர் பெருமாள் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் அளித்த கோரிக்கை மனுவில், எங்கள் ஊராட்சியில் மாதாந்திர கூட்டங்களை முறையாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் ஊராட்சியில் பொதுமக்களுக்கு தேவையான வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பாகவும், நிறைவேற்ற பணிகள் தொடர்பாகவும் வெளிப்படையான சிறப்பு தணிக்கையை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று ஆய்வு நடத்திய கலெக்டர் சாந்தி அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.