நெல்லை பல்கலைக்கழகத்தில் 11-ம் தேதி தேர்வுகள் நடைபெறும் - தேர்வாணையர் அறிவிப்பு
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 11-ம் தேதி தேர்வுகள் நடைபெறும் என்று தேர்வாணையர் தெரிவித்துள்ளார்.;
பேட்டை,
நெல்லையப்பர் கோவிலில் ஆனித் தேரோட்டம் வருகிற 11-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அன்றைய தினம் நெல்லை மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.
ஆனால் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக பொது தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலும் இன்றி 11-ம் தேதி (திங்கள்கிழமை) வழக்கம்போல் நடைபெறும்.
மாவட்ட நிர்வாகம் நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்ட போதிலும் மாணவர்களின் நலன் கருதி தேர்வு நடைபெறும் என்று பல்கலைக்கழக தேர்வாணையர் சாக்ரடீஸ் தெரிவித்துள்ளார்.