நாமக்கல் மாவட்டத்தில்பிளஸ்-2 தேர்வு இன்று தொடக்கம் 19,877 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்

Update: 2023-03-12 19:00 GMT

நாமக்கல் மாவட்டத்தில் இன்று தொடங்க உள்ள பிளஸ்-2 பொதுத்தேர்வை 19,877 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.

பிளஸ்-2 பொதுத்தேர்வு

தமிழகம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வரை பிளஸ்-2 தேர்வு நடக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 200 பள்ளிகளை சேர்ந்த 10 ஆயிரம் மாணவர்கள், 9,877 மாணவிகள் என மொத்தம் 19 ஆயிரத்து 877 பேர் தேர்வை எழுத உள்ளனர்.

மேலும் 352 பேர் தனித்தேர்வர்களாக கலந்து கொள்கின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 85 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இத்தேர்வில் முதன்மை கண்காணிப்பாளர்கள் 85 பேர், துறை அலுவலர்கள் 85 பேர், அறை கண்காணிப்பாளர்கள் 1,377 பேர், நிலையான படையினர் 220 பேர், வழித்தட அலுவலர்கள் 20 பேர் என மொத்தம் 1,787 பேர் ஈடுபட உள்ளனர். இவர்கள் மேஜைகளில் மாணவர்களின் பதிவு எண்களை எழுதி மையங்களை தயார் நிலையில் வைத்து உள்ளனர். பிளஸ்-2 பொதுத்தேர்வுக்காக நாமக்கல் முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டு 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள் வைக்கப்பட்டு உள்ளன.

கட்டுகாப்பு மையங்கள்

இதுகுறித்து பள்ளிகல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலகம், சேந்தமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளி, நாமகிரிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மகாதேவ் வித்யாலயா பள்ளி உள்ளிட்ட 9 இடங்களில் கட்டுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

அங்கிருந்து வினாத்தாள்கள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 85 தேர்வு மையங்களுக்கும் குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுத்து சென்று ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்