தர்மபுரி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வை 2,736 பேர் எழுதினர் கலெக்டர் சாந்தி ஆய்வு

Update: 2022-12-04 18:45 GMT

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 மையங்களில் கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வை 2,736 பேர் எழுதினர். இதனை கலெக்டர் சாந்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

எழுத்து தேர்வு

தர்மபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தாசில்தார்கள் மூலம் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மற்றும் தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு தர்மபுரி, நல்லம்பள்ளி, பாலக்கோடு, பென்னாகரம், மற்றும் காரிமங்கலம் தாலுகா பகுதிகளில் அமைக்கப்பட்டு இருந்த 5 தேர்வு மையங்களில் நடைபெற்றன.

அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்வு எழுத மாவட்ட முழுவதும் மொத்தம் 3,960 பேர் விண்ணப்பித்தனர். தேர்வு மையங்களுக்கு தேர்வாளர்கள் அனைவரும் உரிய அனுமதி சீட்டுடன் வந்தனர். அவர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையத்திற்குள் செல்போன், புத்தகங்கள், கைப்பைகள் மற்றும் வேறு எந்த மின்னணு சாதனங்களையும் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

கலெக்டர் ஆய்வு

இதையடுத்து மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற எழுத்து தேர்வை மொத்தம் 2,736 பேர் எழுதினர். 1,224 பேர் தேர்வு எழுத வரவில்லை. மொத்தம் 69 சதவீத தேர்வாளர்கள் மட்டுமே தேர்வை எழுதினர்.

இதற்கிடையே தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி நல்லம்பள்ளி ஸ்ரீ விஜய் வித்யாலயா மகளிர் கல்லூரி, தர்மபுரி செந்தில் மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மையத்தில் தேர்வாளர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? முழுமையான பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதா? என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது தாசில்தார்கள் ராஜராஜன், ஆறுமுகம் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்