முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
முன்னாள் அமைச்சரும், தி.மு.க. இலக்கிய அணி தலைவருமான இந்திரகுமாரி உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார்.;
சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. இலக்கிய அணி தலைவர் இந்திரகுமாரி, மறைந்த துயர செய்தி வந்து சோகத்தில் ஆழ்த்தியது. நெடிய அரசியல் அனுபவம் கொண்டவரான இந்திரகுமாரி, தமிழக அமைச்சரவையில் இடம் பெற்று மக்களுக்கு பணியாற்றியவர். தீராத தமிழ் புற்றுடன் இலக்கிய வெளியில் இயங்கியவர். அவரது மறைவு தி.மு.க.வுக்கும், இலக்கிய உலகுக்கும் பேரிழப்பாகும்.
இந்திர குமாரியை பிரிந்து வாடும் அவரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், உடன்பிறப்புகளுக்கு என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.