ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டி

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவார் என்று கட்சி மேலிடம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.;

Update: 2023-01-23 00:30 GMT

சென்னை,

தமிழக அரசியல் நோக்கர்களின் கவனம் ஈரோடு கிழக்கு தொகுதியை நோக்கியே உள்ளது.

அந்த தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததையடுத்து பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

காங்கிரசுக்கு ஒதுக்கீடு

ஆளும் தி.மு.க. தனது கூட்டணி கட்சியான காங்கிரசுக்கே இந்த தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி சார்பில் யார் களம் இறங்குவார்? என்ற எதிா்பார்ப்பு நிலவியது.

வேட்பாளர் தேர்வு தொடர்பாக தமிழகத்துக்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, மூத்த தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி உள்ளிட்டோருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.

இதற்கிடையே நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், 'நான் போட்டியிடவில்லை. எனது இளைய மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளேன்' என்று தெரிவித்தார்.

விருப்ப மனு

இதற்கிடையே நேற்றும் வேட்பாளர் தேர்வு தொடர்பாக மூத்த நிர்வாகிகளிடம் தினேஷ் குண்டுராவ் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தனது இளைய மகன் சஞ்சய் சம்பத்துடன் தினேஷ் குண்டுராவை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளர் காண்டீபன் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர். அப்போது சஞ்சய் சம்பத் தனது விருப்பமனுவை கொடுத்தார்.

அதனைத்தொடர்ந்து தினேஷ் குண்டுராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆலோசனை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் குறித்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஈரோடு கிழக்கு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினேன். சிலரை தொலைபேசி வழியாகவும் தொடர்புகொண்டு ஆலோசித்தேன்.

அந்த முடிவை டெல்லியில் உள்ள கட்சி தலைமைக்கு அறிக்கையாக அனுப்பிவைக்க உள்ளேன். எனவே டெல்லியில் இருந்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும்.

சோனியா, ராகுல்

இந்த இடைத்தேர்தலில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் பிரசாரத்துக்கு வர மாட்டார்கள்.இங்கேயே நமது கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.பி.க் கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளார்கள். எனவே இடைத்தேர்தலில் ஒட்டுமொத்த காங்கிரசாரும் முனைப்புடன் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள்.

தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின்ஆதரவு எங்களுக்கு உள்ளது. அதேபோல அந்த தொகுதி மக்களின் ஆதரவுடன்நிச்சயம் இடைத்தேர்தலில் நாங்கள் மகத்தான வெற்றி பெறுவோம். இதில் எந்தசந்தேகமும் வேண்டாம்.

எதிர்க்கட்சி வேட்பாளர் அறிவிப்பதில் நிறைய குழப்பங்கள் நிலவுகிறது. யார் போட்டிக்களத்தில் இருக்க போகிறார்கள்? என்பதே தெரியவில்லை.

நாங்கள் ஜனநாயக வழியில் வலிமையாக களமிறங்க இருக்கிறோம். எனவே வெற்றி உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டி

இதற்கிடையே நேற்று இரவு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் தலைமை அதிகாரபூர்வமாக அறிவித்தது.

அதன்படி இந்த தேர்தலில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இளைய மகனுக்கு வாய்ப்பு கேட்ட நிலையில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட கட்சி மேலிடம் வாய்ப்பு அளித்துள்ளது. இந்த தகவலை மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

தலைமையின் முடிவை ஏற்கிறேன்

வேட்பாளராக அறிவிக்கப்பட்டது தொடர்பாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், 'காங்கிரஸ் தலைமை என் மீது நம்பிக்கை வைத்து வேட்பாளராக அறிவித்து உள்ளது. தலைமையின் முடிவை ஏற்கிறேன். தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும்' என்று தெரிவித்தார்.

தேர்தல் களம்சூடுபிடிக்க தொடங்கியது

காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் குதித்து விட்டன.

மகன் (திருமகன் ஈவெரா) போட்டியிட்டு வென்ற தொகுதியில் தந்தை (ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்) களம் இறங்குவதால் தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.

எதிர்தரப்பை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தங்களது பலத்தை நிரூபிக்க தனித்தனியாக களம் இறங்குவதாக அறிவித்துள்ளனர். ஆனால் இரு தரப்பினரும் வேட்பாளர் பெயரை வெளியிடவில்லை.

பா.ஜ.க. தரப்பில் தேர்தலில் போட்டியா? அல்லது மற்றவர்களுக்கு ஆதரவா? என்று தங்களது நிலைப்பாட்டை இன்னமும் தெரிவிக்கவில்லை. மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் விரைவில் வேட்பாளர்களை அறிவிப்பார்கள் என்று தெரிகிறது.

வாழ்க்கை குறிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (வயது 74), ஈ.வி.கே.சம்பத்தின் மகன் ஆவார்.

இவருக்கு வரலட்சுமி என்கிற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமகன் ஈவெரா, சஞ்சய் சம்பத் ஆகிய 2 மகன்கள். இதில் ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா திடீரென கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் இறந்தார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக 2 முறை பணியாற்றி இருக்கிறார். கடந்த 1984-ம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004-ம் ஆண்டு கோபிசெட்டிபாளையம் தொகுதியில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், மத்திய ஜவுளித்துறை இணை மந்திரியாகவும் பதவி வகித்தார்.

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்