எனக்கென்று நான் எதையும் சம்பாதிக்க வேண்டியது இல்லை; முன்னோர்கள் எங்கள் குடும்பத்துக்கு சேர்த்து வைத்திருக்கிறார்கள்- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு
எனக்கு என்று எதுவும் நான் சம்பாதிக்க வேண்டியது இல்லை. எங்கள் குடும்பத்துக்கு தேவையானவற்றை முன்னோர்கள் சேர்த்து வைத்திருக்கிறார்கள் என்று காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பிரசாரத்தின் போது கூறினார்.;
எனக்கு என்று எதுவும் நான் சம்பாதிக்க வேண்டியது இல்லை. எங்கள் குடும்பத்துக்கு தேவையானவற்றை முன்னோர்கள் சேர்த்து வைத்திருக்கிறார்கள் என்று காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பிரசாரத்தின் போது கூறினார்.
வெற்றி உறுதி
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி வீரப்பன்சத்திரம் பகுதியில் கை சின்னத்துக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.
தொடர்ந்து வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசும்போது கூறியதாவது:-
நான் மகனை இழந்த நிலையில் உங்கள் முன் ஓட்டு கேட்டு வந்திருக்கிறேன். உங்கள் ஒவ்வொருவரின் ஆதரவும் எனது வெற்றி உறுதி என்ற நம்பிக்கையை எனக்கு தந்து உள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சாதனைகள் ஒவ்வொன்றையும் எனது மகனைப்போல நான் நேசிக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறிவிட்டார்.
முன்னோர்கள் சேர்த்து வைத்துள்ளனர்
என் மீது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகுந்த அன்பு வைத்திருக்கிறார். அதே அளவு அனைத்து அமைச்சர்களும் என்மீது அன்பு காட்டுகிறார்கள். நான் எனக்காக அவர்களிடம் எதையும் கேட்கப்போவதில்லை. எனக்கும், எனது மனைவிக்கும், எனது 2-வது மகனுக்கும், எனது குடும்பம் மொத்தத்துக்கும் தேவையானவை என்னிடம் உள்ளன. எனது முன்னோர்கள் எங்கள் குடும்பத்துக்கு தேவையானவற்றை சேர்த்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் சேர்த்து வைத்ததில் 90 முதல் 95 சதவீதம் வரை நான் முடித்து விட்டாலும், எனது குடும்பத்துக்கு தேவையானது இருக்கிறது. எனவே எனக்கு என்று நான் எதுவும் கேட்க வேண்டியது இல்லை.
ஆனால், என் மீது முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் வைத்திருக்கும் அன்பு, உறவை வைத்து இந்த ஈரோட்டுக்கு தேவையான வளர்ச்சிப்பணிகளை என்னால் பெற்றுத்தர முடியும்.
திருமகன் ஈவெரா
ஏற்கனவே அமைச்சர் முத்துசாமி பல நல்ல திட்டங்களை தந்திருக்கிறார். கடந்த 1½ ஆண்டுகளில் நான் வியந்து பார்க்கும் அளவுக்கு எனது மகன் திருமகன் ஈவெரா நல்ல பல திட்டங்களை தந்து இருக்கிறார். அவர் விட்டுச்சென்ற பணிகளை தொடரவும், இன்னும் நல்ல பல திட்டங்கள் நிறைவேற்றவும் எனது உறவினையும், அன்பினையும் ஈரோட்டு மக்களுக்காக பயன்படுத்துவேன்.
இவ்வாறு வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.